காங்கிரஸ் ‘பேராசை’யால் கைநழுவிய வெற்றி? – பிஹார் தேர்தலில் ‘மகா’ சறுக்கல் கதை!

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகிவரும் நிலையில், தொடக்கம் முதலே தேசிய ஜனநாயக கூட்டணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. பெரும் எதிர்பார்ப்புகளுடன் தேர்தலை சந்தித்த ஆர்ஜேடி – காங்கிரஸின் மகா கூட்டணிக்கு மிகப் பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இந்த சறுக்கல்களுக்கு காங்கிரஸ்தான் காரணம் என்ற பேச்சும் எழுந்துள்ளது.

‘பிஹாரில் 20 ஆண்டுகளாக நிதிஷ் குமார் கட்சி ஆட்சியில் இருந்தும் பிஹார் வளரவில்லை. மத்திய அரசு பல்வேறு நிதியுதவிகளை வாரி வழங்கியபோதும், பிஹார் இப்போதும்கூட மிகவும் பின் தங்கிய மாநிலம்தான். தொழில், கல்வி, வேலைவாய்ப்பு எல்லாவற்றிலும் பிஹாரின் நிலைமை கவலைக்கிடம்தான். பிஹாரில் இருந்து லட்சக்கணக்கானோர் புலம்பெயர்ந்து பல மாநிலங்களுக்கும் வேலைவாய்ப்புக்காக செல்கின்றனர்’ – இப்படி பல்வேறு குற்றச்சாட்டுகளை கடந்த சில ஆண்டுகளாகவே அடுக்கி வருகிறார் ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ்.

கடந்த 2020 தேர்தலில் மிக நெருக்கத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தது ஆர்ஜேடி தலைமையிலான மகா கூட்டணி. தேசிய ஜனநாயக கூட்டணி 125 தொகுதிகளை வென்ற நிலையில், மகா கூட்டணியில் ஆர்ஜேடி 144 தொகுதிகளில் போட்டியிட்டு 75-ல் வென்று தனிப்பெரும் கட்சியானது. அப்போது மகா கூட்டணி மொத்தம் 110 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது.

பிஹாரில் இப்போதைய சூழலில் நம்பிக்கைக்குரிய முகங்கள் நிதிஷ் குமாரும், தேஜஸ்வியும்தான். நிதிஷ் குமார் மீது ஆட்சிக்கு எதிரான மனநிலை அதிகரித்துள்ளதால், தேஜஸ்வி யாதவ்தான் அடுத்த முதல்வர் என ஆர்ஜேடி நம்பியது. வளர்ந்த பிஹாரை உருவாக்குவேன் என்ற தேஜஸ்வியின் பேச்சு, அவரின் வாக்குறுதிகள் மக்களிடம் வரவேற்பை பெற்றது.

இந்த நம்பிக்கையுடன் தேர்தலை சந்தித்த ஆர்ஜேடிக்கு தற்போது ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. பிஹார் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், என்டிஏ 190 இடங்களுக்கும் அதிகமாக முன்னிலையில் உள்ளது. மகா கூட்டணியின் முன்னிலை 50 இடங்களுக்குள் சுருங்கிவிட்டது. குறிப்பாக, 61 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் வெறும் 5 தொகுதிகளில் மட்டுமே முன்னிலையில் உள்ளது.

மகா கூட்டணி சறுக்கியது எப்படி? – சட்டப்பேரவை தேர்தலில் தங்கள் அணிக்கு பெரும் சவால் உள்ளது என்பதை சில மாதங்களுக்கு முன்பே உணந்த தேசிய ஜனநாயக கூட்டணி, பிஹாரில் பல நலத்திட்டங்களை குவிக்க ஆரம்பித்தது. பல்வேறு தரப்பினருக்கும் நிதிஷ்குமார் பணமழையை பொழிந்தார். இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக தொழில் தொடங்குவதற்காக ஒரு கோடி பெண்களுக்கு ரூ.10 ஆயிரம் வழங்கினார் நிதிஷ்.

இந்த தேர்தலில் மிகப் பெரிய தாக்கத்தை உருவாக்கியதில், இந்த பத்தாயிரத்துக்கு பெரும் பங்குண்டு. அதுபோல தேர்தல் அறிவிக்கப்பட்டவுடனே சலசலப்புகள் ஏதுமின்றி, முதல் ஆளாக தொகுதிப் பங்கீட்டையும் முடித்து, தங்களுக்கும் கசப்பு எதுவும் இல்லை என மக்களிடம் நம்பிக்கையையும் விதைத்தார்கள்.

தேர்தல் பணிகளில் என்டிஏ ஒருபக்கம் விறுவிறுப்பு காட்டிய நிலையில், மறுபக்கம் மகா கூட்டணி தங்களுக்குள் ‘கோதா’ நடத்திக் கொண்டிருந்தார்கள். பிஹாரில் மகா கூட்டணியின் பஞ்சாயத்து ராகுல் நடத்திய ‘வாக்காளர் அதிகார யாத்திரை’யின் போதே ஆரம்பித்தது. அந்த யாத்திரையின்போதே தேஜஸ்வியை முதல்வர் வேட்பாளராக ராகுல் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. தேஜஸ்வியும் ராகுல் யாத்திரைக்கு முழுமையான ஒத்துழைப்பு கொடுத்தார். ஆனால், அப்போது தேஜஸ்வியை முதல்வர் வேட்பாளராக அறிவிக்காமல் ஷாக் கொடுத்தார் ராகுல்.

தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டும்கூட டெல்லியில் உட்கார்ந்து கொண்டு தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தைகளை இழுத்தடித்தது காங்கிரஸ். கடந்த முறை 70 தொகுதிகளில் போட்டியிட்டு 19-ல் மட்டுமே வென்ற காங்கிரஸ், இம்முறை அதைவிட அதிகமான தொகுதிகளை கேட்டு அதிர்ச்சி கொடுத்தது. இதன் காரணமாக கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை பிரித்துக் கொடுக்க முடியாமல் அல்லாடியது ஆர்ஜேடி. இதனால் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணியிலிருந்தே வெளியேறியது. பசுபதிகுமார் பராஸும் தொகுதி பங்கீடு சிக்கலால் கூட்டணிக்குள் வராமல் போனார்.

கடைசி வரை கூடுதல் தொகுதிகள் கேட்டு காங்கிரஸ் கொடுத்த அழுத்தம் காரணமாக விஐபி, சிபிஐ (எம்-எல்) உள்ளிட்ட கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்க இயலாமல் ஆர்ஜேடி கையை பிசைந்து கொண்டிருந்தது. இதனால் வேட்புமனு வாபஸ் பெறும் நாள் வரை தொகுதி பங்கீடு இறுதியாகாமல் தங்குள்ளாகவே அடித்துக்கொண்டு கிடந்தனர் மகா கூட்டணியினர். அதன்பின்னர் ஒருவழியாக ஆர்ஜேடி 143, காங்கிரஸ் 61, சிபிஐ எம்-எல் 20, விஐபி 12, சிபிஐ 9 என தொகுதிகளை பிரித்துக்கொண்டார்கள். அதன்பின்னரும் கூட சில தொகுதிகளில் மகா கூட்டணி கட்சிகள் தங்களுக்குள்ளேயே மோதிக் கொண்டனர்.

மகா கூட்டணியில் நடந்த தொகுதிப் பங்கீடு இழுபறியை பார்த்து அப்போதே கடுமையாக விமர்சித்தது பாஜக. ‘தொகுதிகள் பிரிக்கவே இப்படி அடித்துக்கொள்கிறார்கள், ஒருவேளை இவர்கள் வெற்றி பெற்றால் என்ன நடக்கும்?’ என என்டிஏ காட்டமாக கேள்வி கேட்டது.

மகா கூட்டணியில் தொகுதி பங்கீட்டின்போது ஏற்பட்ட நெருடலால், கூட்டணி கட்சிகளுக்குள் சரியான ஒருங்கிணைப்பு ஏற்படவில்லை. கடைசிவரை நீடித்த மோதலால் மகா கூட்டணி கட்சிகளின் தொண்டர்களின் உற்சாகம் தொடக்கத்திலேயே பூஜ்ஜியமானது. இப்போது வெளியாகியுள்ள தேர்தல் முடிவுகளும் அதனையே காட்டுகிறது.

ஏனெனில், கடந்தமுறை 75 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக இருந்த ஆர்ஜேடி, இம்முறை 35+ தொகுதிகளில்தான் முன்னிலையில் உள்ளது. 60 தொகுதிகளை அடித்துப் பிடித்து வாங்கிய காங்கிரஸ் 5 தொகுதிகளில்தான் முன்னிலையில் உள்ளது. இதன்படி பார்த்தால் மகா கூட்டணி கட்சிகளுக்குள் வாக்கு பரிமாற்றம் நடக்கவில்லை எனத் தெரிகிறது. தொகுதி பங்கீட்டில் உருவான குழப்பம் தேர்தல் ரிசல்ட் வரை தாக்கத்தை உருவாக்கிவிட்டது.

கடந்த முறை தேர்தல் முடிவுகளில் கையை சுட்டுக்கொண்ட காங்கிரஸ் இம்முறையாவது கொஞ்சம் அடக்கி வாசித்திருந்தால் மகா கூட்டணி முன்னிலை பெற்றிருக்கும். காங்கிரஸின் பேராசைதான் ஒட்டுமொத்த மகா கூட்டணியையும் படுபாதாளத்தில் தள்ளியிருக்கிறது என சொல்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

அதேவேளையில், பிஹார் தேர்தலில் எஸ்ஐஆர், வாக்குத் திருட்டு விவகாரங்களை முன்வைத்து தோல்விக்கான காரணங்களை காங்கிரஸ் அடுக்கத் தொடங்கியிருப்பதும் கவனிக்கத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.