கொல்கத்தா,
19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் மினி ஏலம் அடுத்த மாதம் (டிசம்பர்) 16-ந்தேதி அபுதாபியில் நடைபெறுகிறது. இதையொட்டி தக்கவைக்கப்படும் மற்றும் விடுவிக்கப்படும் வீரர்களின் பட்டியலை நாளைக்குள் 10 அணிகளும், ஐ.பி.எல். நிர்வாகத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். அதற்கு முன்பாக பரஸ்பர பேச்சுவார்த்தையின் மூலம் வீரர்கள் வர்த்தக பரிமாற்றம் நடந்து வருகிறது.
முன்னதாக இந்த வருடம் நடைபெற்ற 18-வது சீசனில் நடப்பு சாம்பியனாக களமிறங்கிய கொல்கத்தா அணி புள்ளி பட்டியலில் 8-வது இடம் பிடித்து வெளியேறியது. இதனால் வரும் சீசனுக்கு முன்னதாக தங்களது அணியை பலப்படுத்தும் நோக்கில் கொல்கத்தா நிர்வாகம் பல மாற்றங்களை செய்து வருகிறது.
அதன்படி அந்த அணியின் பயிற்சியாளர் குழுவில் ஏகப்பட்ட மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. தலைமை பயிற்சியாளராக இருந்த சந்திரகாந்த் பண்டித் அந்த பதவியில் இருந்து விலகிய நிலையில் புதிய தலைமை பயிற்சியாளராக அபிஷேக் நாயர் நியமிக்கப்பட்டார். அத்துடன் துணை பயிற்சியாளராக ஷேன் வாட்சன் நியமிக்கப்பட்டார்.
அந்த வரிசையில் கொல்கத்தா அணியின் புதிய பந்துவீச்சு பயிற்சியாளராக நியூசிலாந்து முன்னாள் வீரரான டிம் சவுதி நியமிக்கப்பட்டுள்ளார். இவரது அனுபவம் நிச்சயம் கொல்கத்தா அணிக்கு வலு சேர்க்கும் என்பதில் சந்தேகமில்லை.
இவர் ஏற்கனவே 2021 – 2023 ஆண்டுகளில் கொல்கத்தா அணிக்காக ஆடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.