திருப்பதி: திருப்பதி ஏழுமலையானுக்கு பக்தர்கள் உண்டியல் மூலம் செலுத்தும் பணத்தை எண்ணும் இடத்தை ‘பரகாமணி’ என்றழைக்கின்றனர்.
தீவிர சோதனை, கண்காணிப்பு கேமராக்கள் போன்ற கெடுபிடிகள் இருந்தாலும், தேவஸ்தான சீனியர் அஸிஸ்டெண்டாக பணிபுரிந்து வந்த ரவிக்
குமார் கடந்த 2023-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளிநாட்டு கரன்ஸிகளை எடுத்து ஒளித்து வைத்து கொண்டிருந்தபோது, அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த திருமலை திருப்பதி தேவஸ்தான உதவி பாதுகாப்பு அதிகாரி (ஏவிஎஸ்ஓ) சதீஷ் குமார் கையும் களவுமாக பிடித்தார்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சுமார் ரூ.100 கோடி வரை திருடியதையும் தான் திருடிய சொத்துகளில் 2 வீடுகளை மட்டும் வைத்து கொண்டு மீதமுள்ள அனைத்து சொத்துகள் அனைத்தையும் மீண்டும் தேவஸ்தானத்திற்கே திருப்பி தானமாக கொடுத்து விடுவதாகவும் கூறினார்.
இதனிடையே ஆந்திராவில் ஆட்சி மாறியதையடுத்து, இது தொடர்பாக ஆந்திர உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு சிஐடி போலீஸார் விசாரிக்க உத்தரவிடப்பட்டது. சமீபத்தில் இந்த விசாரணைக்கு ரவிக்குமாரை கைது செய்த முன்னாள் தேவஸ்தான உதவி பாதுகாப்பு அதிகாரி சதீஷ் குமார் வாக்குமூலம் கொடுத்தார்.
இந்நிலையில், தற்போது குந்தக்கல் ரிசர்வ் போலீஸ் படையில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வரும் முன்னாள் தேவஸ்தான உதவி பாதுகாப்பு அதிகாரி சதீஷ்குமார் நேற்று அனந்தபூர் மாவட்டம், தாடிபத்ரி அருகே கோமலி ரயில் நிலையத்துக்கு சற்று தொலைவில் தண்டவாளத்தில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார். ரவிக்குமார் திருட்டு வழக்கில் முக்கிய சாட்சியான சதீஷ்குமார் கொலைசெய்யபட்டாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.