பிஹார் தேர்தல் முடிவு அனைவருக்கும் பாடம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் அனைவருக்கும் பாடங்களை வழங்கியுள்ளதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளங்களில் குறிப்பிட்டுள்ளார்.

பிஹார் சட்​டப்​பேர​வைத் தேர்​தல் கடந்த 6, 11 ஆகிய தேதி​களில் 2 கட்​ட​மாக நடை​பெற்​றது. வாக்கு எண்ணிக்கை நேற்று நடை​பெற்​று, முடிவு​கள் அறிவிக்​கப்​பட்​டன. மொத்​தம் உள்ள 243 தொகு​தி​களில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்​டணி 202 இடங்​களைக் கைப்​பற்றி அமோக வெற்றி பெற்​றுள்​ளது. மெகா கூட்ட​ணிக்கு 35 இடங்​கள் மட்​டுமே கிடைத்​தன.

இந்நிலையில் பிஹார் தேர்தல் முடிவு குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘அனைவருக்கும் பாடங்களை வழங்கியுள்ள பிஹார் சட்டமன்றத் தேர்தல்’ என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள சமூகவலைதளப் பதிவில், “பெரும் வெற்றியைப் பெற்றுள்ள மூத்த தலைவர் நிதிஷ் குமாருக்கு எனது பாராட்டுகள். பிஹார் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற அவருக்கு எனது வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஓயாமல் பரப்புரை மேற்கொண்ட இளந்தலைவர் தேஜஸ்வி யாதவுக்கும் எனது பாராட்டுகள்.

நலத் திட்ட விநியோகம், சமூக – கொள்கைக் கூட்டணிகள், நாம் சொல்ல வேண்டிய அரசியல் ரீதியான செய்தியைத் தெளிவாக மக்களிடம் சொல்வது, இறுதி வாக்குப் பதிவாகும் வரை அர்ப்பணிப்புடன் தேர்தல் பணியாற்றுவது எனப் பலவற்றையும் ஒரு தேர்தல் முடிவு பிரதிபலிக்கிறது. இண்டியா கூட்டணியில் உள்ள அனுபவமிக்க தலைவர்கள் இத்தகைய செய்தியை உணரவும், இனி எழும் சவால்களை எதிர்கொள்வதற்கான திட்டங்களை வகுக்கவுமான ஆற்றலைப் பெற்றவர்கள்.

அதேவேளையில், இத்தேர்தல் முடிவுகள் தேர்தல் ஆணையத்தின் குளறுபடிகளையும் பொறுப்பற்ற செயல்களையும் இல்லாமல் ஆக்கிவிடாது. தேர்தல் ஆணையத்தின் மீதான மரியாதை இதுவரை இல்லாத அளவுக்குக் கீழிறங்கியுள்ளது. வலுவான, நடுநிலையான தேர்தல் ஆணையத்தைக் கோருவது நம் நாட்டு மக்களின் உரிமை. தேர்தலில் வெற்றி பெறாதோரின் நம்பிக்கையையும் பெறும் அளவுக்கு தேர்தல் ஆணையம் நியாயமான முறையில் தேர்தல்களை நடத்திட முன்வர வேண்டும்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.