அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை, அக்கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி அடக்கி வைக்க வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
பிஹார் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்த நிலையில், காங்கிரசை கலைத்து விடுங்கள் என்று ராஜேந்திர பாலாஜி கூறியிருந்தார். இதற்கு பதிலளித்து செல்வப்பெருந்தகை செய்தியாளர்களிடம் கூறியதாவது: அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, குறைந்தபட்ச நாகரிகம், அரசியல் நாகரிகம் கூட தெரியாமல், காங்கிரஸ் குறித்தும், ராகுல்காந்தி குறித்தும் பேசி இருக்கிறார்.
பிஹாரில் காங்கிரஸ் முதன்மைக் கட்சி கிடையாது. தேஜஸ்வியின் ஆர்ஜேடி கட்சி தான் முதன்மை கட்சி. தமிழகத்தில் 1991-96ல் ஆட்சியில் இருந்த முதன்மை கட்சியின் நிலை, 1996 தேர்தலில் என்ன ஆனது, அவர்கள் எத்தனை தொகுதிகளில் வென்றார்கள். கட்சி தலைமை பொறுப்பு வகித்த ஜெயலலிதாவே, தோற்றார்.
அன்றைக்கு நாங்கள் அதிமுகவை கலைத்துவிடுங்கள் என்று சொன்னோமா? நாகரிகமற்ற முறையில் பேசினோமா? உங்கள் தலைவரை வீட்டுக்கு செல்லுங்கள் என்று சொன்னோமா? காங்கிரஸ் கட்சியின் நாகரிகத்துக்கும், அதிமுகவின் நாகரிகத்துக்கும் உள்ள வித்தியாசம் இது தான். நாகரிகம் அறியாமல், உலக வரலாறு, இந்திய வரலாறு தெரியாமல், கட்சிகளின் வரலாறு தெரியாமல் ஒரு முன்னாள் அமைச்சர் பேசுகிறார் என்றால் பழனிசாமி, ராஜேந்திர பாலாஜியை அழைத்து கண்டிக்க வேண்டாமா.
சிறுபான்மை மக்களை ஆதரித்தால் தீவிரவாதி என்று சொல்வது, ஒரு தனிப்பட்ட மனிதன் தவறு செய்தால் ஒட்டுமொத்த சமூகத்தையே குற்றம் சொல்வது மிகப்பெரிய கொடுமை. நாட்டின் விடுதலைக்காக 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருந்தவரின் கொள்ளுப்பேரன், நாட்டுக்காக உயிர்நீத்த தலைவர்களின் குடும்பத்திருந்து வந்தவர் ராகுல் காந்தி. காங்கிரஸ் வரலாறு தெரியாதவர் ராஜேந்திர பாலாஜி. அவரை எடப்பாடி பழனிசாமி அடக்கி வைக்க வேண்டும். வெளிப்படையாக ராஜேந்திர பாலாஜி மன்னிப்பு கேட்க வேண்டும். அவர் பேச்சை வன்மையாக கண்டிக்கிறோம். அவர் பேசியதை திரும்ப பெற வேண்டும். இல்லாவிட்டால் அவருக்கு எதிராக போராட்டம் நடத்துவோம்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.