ராவல்பிண்டி,
பாகிஸ்தான், ஜிம்பாப்வே மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையிலான முத்தரப்பு டி20 தொடர் பாகிஸ்தானில் நடைபெறுகிறது. இன்று தொடங்கிய இந்த தொடரின் முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் – ஜிம்பாப்வே அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பிரையன் பென்னட் – மருமணி களமிறங்கினர். பாகிஸ்தான் பந்துவீச்சை திறம்பட சமாளித்த இந்த ஜோடி வலுவான அடித்தளம் அமைத்து கொடுத்தது. முதல் விக்கெட்டுக்கு 8 ஓவர்களில் 72 ரன்கள் அடித்த நிலையில் இந்த ஜோடி பிரிந்தது. மருமணி 30 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இந்த ஜோடி பிரிந்ததும் ஜிம்பாப்வே அணி ரன் குவிக்க முடியாமல் தடுமாறியது. அடுத்து வந்த டெய்லர் 14 ரன்களிலும், ரையன் பர்ல் 8 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பென்னட் 49 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த வீரர்களில் கேப்டன் சிக்கந்தர் ராசா (34 ரன்கள்) தவிர மற்ற யாரும் ரன் அடிக்கவில்லை. பாகிஸ்தான் திறம்பட பந்துவீசி ரன் குவிப்பை கட்டுப்படுத்தியது.
20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த ஜிம்பாப்வே 147 ரன்கள் அடித்துள்ளது. பாகிஸ்தான் தரப்பில் முகமது நவாஸ் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதனையடுத்து 148 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற சவாலான இலக்கை நோக்கி பாகிஸ்தான் களமிறங்கி உள்ளது.