
பிஹார்: லாலுவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ், ராஷ்டிரிய ஜனதா தளத்தில் இருந்து விலகி ஜனசக்தி ஜனதா தளம் என்ற புதிய கட்சியை தொடங்கி உள்ளார். பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் அவரது புதிய கட்சி 22 தொகுதிகளில் போட்டியிட்டது. மஹுவா சட்டப்பேரவைத் தேர்தலில் தேஜ் பிரதாப் யாதவ் போட்டியிட்டார். அவர் உட்பட ஜன சக்தி ஜனதா தளத்தின் அனைத்து வேட்பாளர்களும் தோல்வியை தழுவினர்.
இதுதொடர்பாக பாட்னாவில் உள்ள தேஜ் பிரதாப் யாதவின் வீட்டில் கட்சி தலைவர்கள் நேற்று ஆலோசனை நடத்தினர். இதன்பிறகு கட்சியின் செய்தித் தொடர்பாளர் பிரேம் யாதவ் கூறும்போது, “தேர்தல் தோல்வி குறித்து விரிவாக ஆலோசனை நடத்தினோம். அடுத்த கட்டமாக கட்சியை வலுப்படுத்த நடவடிக்கை எடுப்போம். பிஹாரில் பதவியேற்க உள்ள தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) அரசுக்கு எங்கள் கட்சி தார்மிக அடிப்படையில் ஆதரவு அளிக்கும்’’ என்று தெரிவித்தார்.