`பேரிடரை ஏற்படுத்தி விடாதீர்கள்' – சபரிமலையில் பக்தர்கள் எண்ணிக்கையை குறைத்த கேரளா உயர் நீதிமன்றம்

சபரிமலை ஐயப்ப சுவாமி கோவிலில் மண்டலகால மகரவிளக்கு பூஜைகளுக்காக கடந்த 16-ம் தேதி மாலை 5 மணிக்கு நடைதிறக்கப்பட்டது. ஆன்லைன் முன்பதிவு மூலமாக 70 ஆயிரம் பக்தர்களும், ஸ்பாட் புக்கிங் மூலமாக 20000 பக்தர்களும் என தினமும் 90 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் சபரிமலையில் நடைதிறக்கப்பட்ட முதல் நாளிலேயே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

கூட்ட நெரிசலில் சிக்கி பெண் பக்தர்களும், குழந்தைகளும் மூச்சுவிடமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர். நிலைமை கையைமீறிச் சென்றது. போலீஸாராலும், தேவசம்போர்டு ஊழியர்களாலும் எதுவும் செய்யமுடியாத நிலை ஏற்பட்டது. பம்பாவிலிருந்து சன்னிதானத்தை சென்றடைய 20 மணி நேரம் வரை ஆனதாக பக்தர்கள் தெரிவித்தனர்.

பதினெட்டாம்படிக்கு கீழ் உள்ள திருமுற்றம் மற்றும் வலியநடைப்பந்தல் பகுதிகளில் பக்தர்கள் அதிக அளவில் கூட்ட நெரிசலில் சிக்கி தவித்தனர். உணவு, தண்ணீர் கிடைக்காமலும், டாய்லெட் வசதி இல்லாமலும் பக்தர்கள் அல்லாடினர். ஒருகட்டத்தில் பக்தர்கள் பதினெட்டாம்படியை நோக்கி கும்பலாக நகரந்ததால் நிலைமை இன்னும் மோசமானது. இது திருவிதாங்கூர் தேவசம்போர்டு மற்றும் கேரள அரசின் தோல்வி என எதிர்கட்சிகள் விமர்சித்தன.

சபரிமலை ஐயப்ப சுவாமி கோயில்

ஸ்பாட் புக்கிங் கவுண்டருக்கு 20,000 பேருக்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்தாலும் அவர்கள் அனுமதிக்கப்பட்டதே கூட்ட நெரிசலுக்கு காரணம் என கண்டறியப்பட்டது. இந்த விவகாரம் குறித்து கேரளா ஐகோர்ட் தேவசம் போர்டு பெஞ்ச் விசாரணை நடத்தியது.

இதுகுறித்து ஐகோர்ட் கூறுகையில், “சபரிமலையில் பக்தர்களுக்கான முன்னேற்பாடுகளை ஆறு மாதங்களுக்கு முன்பே செய்திருக்க வேண்டும். மண்டல காலம் தொடங்கி இரண்டாவது நாளே பக்தர்கள் நெரிசல் ஏற்பட என்ன காரணம் ஆன்லைன் முன்பதிவு மற்றும் ஸ்பாட் புக்கிங் ஆகியவறில் சரியான நடைமுறை பின்பற்ற வேண்டும்.

தினமும் 70 ஆயிரம் பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு மூலமாகவும், 5 ஆயிரம்பேர் ஸ்பாட் புக்கிங் மூலமாகவும் அனுமதிக்க வேண்டும். இனி ஒருநாள் 75 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே சபரிமலை தரிசனத்துக்கு அனுமதிக்க வேண்டும். வரும் 24-ம் தேதிவரை இந்த நிலை தொடர வேண்டும். ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்திருந்தாலும், முன்பதிவு சமயத்தைத் தாண்டி 18 மணிநேரம் கழித்து வந்தால் அவர்களை பம்பாவில் இருந்து சன்னிதானம் செல்ல அனுமதிக்கக்கூடாது.

சபரிமலையில் பக்தர்கள் கூட்டம்

தேவையான அளவு கழிவறைகள் ஏற்படுத்தப்படவேண்டும். ஒரு பேரிடரை ஏற்படுத்திவிடாதீர்கள். நிலக்கல் முதல் சன்னிதானம் வரை ஐந்தோ, ஆறோ செக்டர்கள் ஏற்படுத்த வேண்டும். அந்த இடங்களில் எத்தனை பக்தர்களை நிறுத்த முடியும் என கணக்கிட வேண்டும். அதை விட்டுவிட்டு வரும் பக்தர்களை எல்லாம் சன்னிதானம் நோக்கி அனுப்பினால் அது தவறான ஒரு செயல்பாடாக அமையும். குழந்தைகளும் வயது முதிர்ந்தவர்களும் பல மணி நேரம் கியூ வில் காத்து நிற்கிறார்கள். திருவிழா நடத்துவது போன்றது அல்ல இது. மண்டல மகர விளக்கு காலம் குறித்த மிகவும் தெளிவான பார்வை தேவசம்போர்டுக்கு வேண்டும்” என கோர்ட் தெரிவித்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.