தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் கரூரில் தேர்தல் பிரச்சார பரப்புரை மேற்கொண்டபோது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதனால் விஜய் பிரச்சாரத்தை தற்காலிகமாக நிறுத்தினார்.
இதற்கிடையே சென்னையில் சமீபத்தில் நடந்த தமிழக வெற்றி கழகத்தின் சிறப்பு பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் விஜய் கலந்துகொண்டு பேசும்போது எனது அரசியல் பயணம் இன்னும் வேகமாக இருக்கும் என்றும் பேசினார்.

அப்பொழுது கூட்டத்தில் கலந்துகொண்ட மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள், நாமக்கல் மற்றும் கரூரில் பிரச்சாரம் செய்துவிட்டதால், அருகில் உள்ள மாவட்டமான சேலத்தில் இருந்து மீண்டும் பிரச்சாரத்தை தொடங்குமாறு விஜய்யிடம் விருப்பம் தெரிவித்து கோரிக்கை வைத்ததாகக் கூறப்படுகிறது. அதற்கு அவர் சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதனால் மீண்டும் எப்பொழுது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குவார் என்று தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் எதிர்பார்ப்புடன் இருந்து வந்தனர்.
இந்த நிலையில், டிசம்பர் 4ஆம் தேதி சேலத்தில் விஜய்யின் தேர்தல் பிரச்சார பரப்புரை கூட்டத்திற்கு அனுமதி கேட்டு, தமிழக வெற்றி கழகத்தின் சேலம் மத்திய மாவட்ட செயலாளர் பார்த்திபன் தலைமையில் சேலம் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு சென்றார்.
குறிப்பாக சீலநாயக்கன்பட்டி, போஸ் மைதானம், கோட்டை மைதானம் ஆகிய மூன்று இடங்களில் அனுமதி கேட்டுள்ளனர்.
ஆனால், டிசம்பர் 3ஆம் தேதி கார்த்திகை தீபம் மற்றும் டிசம்பர் 6ஆம் தேதி பாபர் மசூதி இடிப்பு தினம் ஆகிய இரண்டு தினங்களுக்கு இடையே டிசம்பர் 4ஆம் தேதியில் அனுமதி அளிக்கப்படாது. காவல்துறையினர் ஆங்காங்கே பாதுகாப்பு பணிக்கு செல்வார்கள். எனவே மாற்று தேதியை காவல்துறை தரப்பில் கேட்டனர்.

தமிழக வெற்றி கழகத்தின் தலைமையை கேட்டு தகவல் தெரிவிப்பதாக சேலம் மத்திய மாவட்ட செயலாளர் பார்த்திபன் கூறியுள்ளார்.
அந்த தேதியை தவிர்த்து மற்ற தேதிகளில் அனுமதி அளிக்கப்படும் எனவும் சேலம் மாநகர காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
குறிப்பாக தற்பொழுது காவல்துறை முடிவு செய்து சீலநாயக்கன்பட்டி பகுதியில் அனுமதி அளிப்பதற்கு தயாராக உள்ளதாகவும், ஆனால், தமிழக வெற்றி கழகத்தின் சார்பாக கொடுக்கப்பட்ட மனுவில் மக்கள் கூட்டத்தின் எண்ணிக்கை குறிப்பிடப்படாமல் உள்ளது. தேர்தல் பிரச்சார பரப்புரைக்கு, எவ்வளவு மக்கள் கூட்டம் வரும் என்று எண்ணிக்கை தெரிவித்தால் அதற்கு ஏற்றார் போல் இடம் முடிவு செய்வது குறித்து அடுத்த கட்ட முடிவுகள் எடுக்கப்படும் என்று சேலம் மாநகர காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.