
சிவகாசியில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை காங்கிரஸ் கட்சியினர் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், இம்முறை சிவகாசியில் போட்டியிடும் திட்டத்துடன் இருக்கும் திமுக மவுன சாட்சியாக நிற்பது உடன்பிறப்புகள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
2011, 2016 சட்டப்பேரவை தேர்தல்களில் சிவகாசி தொகுதியில் வெற்றி பெற்று அமைச்சராக இருந்தார் கே.டி.ராஜேந்திர பாலாஜி. தொடர்ச்சியாக 10 ஆண்டுகள் அமைச்சராக இருந்ததால் விருதுநகர் மாவட்ட அதிமுக-வில் அசைக்க முடியாத சக்தியாகவும் உருவெடுத்தார். அமைச்சர் அந்தஸ்தில் அமர்ந்திருந்தபோது ஸ்டாலினை கடுமையாக ஒருமையில் விமர்சித்து பரபரப்பை ஏற்படுத்தியவர் பாலாஜி. அப்படிப்பட்டவர் கடந்த 2021 தேர்தலில் தொகுதி மாறி ராஜபாளையத்தில் போட்டியிட்டு தோற்றுப் போனார். ஒருமுறை சூடுபட்டுக் கொண்டதால் இம்முறை மீண்டும் சிவகாசியில் போட்டியிட ஆயத்தமாகி வருகிறார்.