ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமியின் மகள் இந்திராணி தன்னுடைய கணவர் துவாரநாதனுடன் திண்டுக்கல் வள்ளலார் நகரில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். துவாரநாதன் வத்தலகுண்டு அருகேயுள்ள ஓட்டுப்பட்டியில் ‘அலமேலு மில்ஸ்’ என்ற கார்மெண்ட்ஸ் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
இன்று மதியம் 2 மணி அளவில் இந்திராணியின் வீடு மற்றும் மில்லிற்கு வந்த ஜிஎஸ்டி நுண்ணறிவு பிரிவு ( Directorate General of GST Intelligence (DGGI) அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
கோவையிலிருந்து வந்த பெண் அதிகாரி உட்பட நான்கு நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டனர்.

சோதனை நடைபெறுவதையொட்டி மேயர் இளமதி, துணை மேயர் ராஜப்பா மற்றும் திமுகவினர் வீட்டின் முன் குவிய தொடங்கினர்.
துணை மேயர் ராஜப்பா, இந்திராணியின் வீட்டிற்குள் செல்ல முயற்சித்த போது அதிகாரிகள் அவரை வெளியே செல்ல சொல்லி அறிவுறுத்தி, வெளியேற்றினர்.
தொடர்ந்து மாலை 6 மணி அளவில் இந்திராணியின் வீட்டிற்கு ஐ.பி. செந்தில்குமாரின் மனைவி மெர்சி வந்தார். உடனே வெளியே வந்த அதிகாரிகள் அவரை வீட்டிற்குள் அழைத்து சென்றனர். மெர்சியிடமும் விசாரணை நடைபெற்றதாக சொல்லப்படுகிறது.

தொடர்ந்து, இரவு 8 மணியை கடந்தும் மூவரிடமும் விசாரணை நடைபெற்றதால் வீட்டின் வெளியே கூடியிருந்த திமுகவினர் அதிகாரிகளை ‘வெளியே வா, வெளியே வா ‘என்று கூச்சலிட தொடங்கினர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
உடனடியாக வெளியே வந்த ஜிஎஸ்டி அதிகாரிகள் பிரிண்டரில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது மேலும் சோதனை முடிவடைய 1 மணி நேரத்திற்கு மேல் ஆகும். தேவை எனில் வழக்குரைஞர்கள் வீட்டுக்குள் வந்து பார்வையிடலாம் என தெரிவித்தனர். இதனை தொடர்ந்து 2 வழக்குரைஞர்கள் அமைச்சர் மகள் இந்திராவின் வீட்டுக்குள் சென்றனர்.

அதனைத் தொடர்ந்து வெளியே வந்த அமைச்சர் மகள் இந்திரா மற்றும் மருமகள் மெர்சி செந்தில்குமார் ஆகியோர் ஜிஎஸ்டி அதிகாரிகள் ‘கணக்கு வழக்கு தொடர்பான சோதனைகள் மட்டுமே நடைபெறுவதாக’ தெரிவித்தனர். இதனை அடுத்து திமுகவினர் கலைந்து சென்றனர்.
இந்த நிலையில் சரியாக இரவு 9.00 மணியளவில் அமைச்சர் மகள் இந்திரா வீட்டில் நடைபெற்ற சோதனை முடிவடைந்து ஜிஎஸ்டி நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் (DGGI) மூன்று பைகளில் ஆவணங்களுடன் வெளியே வந்து இரண்டு வாகனங்களில் புறப்பட்டு சென்றனர்.

கடந்த 7 மணி நேரமாக ஐ.பெரியசாமியின் மகள், மருமகன், மருமகள் என மூவரையும் ஜிஎஸ்டி நுண்ணறிவு பிரிவினர் விசாரணை செய்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.