Friends: " 'டேய் மிஸ் பண்ணிடாத'னு விஜய் சொன்ன விஷயம்தான்…" – சீக்ரெட்ஸ் பகிரும் நடிகர் ஶ்ரீமன்!

நிச்சயமாக நாம் அனைவருக்கும் குடும்பமாக உட்கார்ந்து ‘ஃப்ரெண்ட்ஸ்’ திரைப்படம் பார்த்து மகிழ்ந்த அனுபவம் இருக்கும்.

படம் முழுக்க நம்மை குலுங்க குலுங்க சிரிக்க வைத்திருப்பார் இயக்குநர் சித்திக். ‘ஃப்ரெண்ட்ஸ்’ படத்தின் நகைச்சுவை காட்சிகள் சமூக வலைதளங்களில் காலம் கடந்தும் மீம் டெம்ப்லேட்டுகளாக கொண்டாடப்பட்டு வருகிறது.

ப்ரண்ட்ஸ்: இயக்குநர் சித்திக், விஜய், சூர்யா
ப்ரண்ட்ஸ்: இயக்குநர் சித்திக், விஜய், சூர்யா

இவ்வளவு நகைச்சுவை கதையாடலுக்கு மத்தியில் ஒரு நெகட்டிவ் கதாபாத்திரத்தை அதுவும் விஜய்-சூர்யா என்று இருவருக்கும் வில்லனாக ஒரு கதாபாத்திரத்தைத் தூக்கிச் சுமப்பது எளிதான காரியமல்ல.

அதை கணக்கச்சிதமாக செய்தவர் நடிகர் ஶ்ரீமன். ரீ-ரிலீஸையொட்டி அவரிடம் பேசினோம்.

நம்மிடையே பேசிய அவர், “என்னுடைய கெளதம் கதாபாத்திரத்தை வேறொரு புகழ்பெற்ற நடிகர் மூன்று நாட்கள் நடித்துள்ளார்.

ஆனால் இயக்குநர் சித்திக் திருப்தி அடையவில்லையாம். அந்தச் சூழலில் இயக்குநரிடம் விஜய்யும் சூர்யாவும் என்னைப் பரிந்துரை செய்திருக்கிறார்கள்.

சேது வெளியான தருணம் அது. நான் பிஸியாக இருக்கலாம் என்பதையும் குறிப்பிட்டுக் கூறியுள்ளனர். படக்குழு என்னைத் தொடர்பு கொண்டு, ‘சேது திரைப்படம் பார்த்தோம்.

உங்களால் ஒரு பத்து நாள் ஷூட்டுக்கு வர முடியுமா’ என்று கேட்டனர். அப்போது நான் ஹைதராபாத்தில் ‘சேது’ திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்துக் கொண்டிருந்தேன்.

Sriman with Vadivelu
Sriman with Vadivelu

இப்படி ஒரு வாய்ப்பு கிடைத்ததைப் பற்றி தெலுங்குப் படக்குழுவினரிடம் நான் கூறியபோது பட ஷூட்டிங்கை விட்டுக்கொடுத்து என்னை அனுப்பிவைத்தனர்.

அன்றே விமானம் ஏறி சென்னை வந்து நேராக பழனியில் நடைபெற்ற ‘ஃப்ரெண்ட்ஸ்’ ஷூட்டிங் ஸ்பாட்டுக்குச் சென்றேன்.

இயக்குநர் சித்திக் என்னைப் பார்த்துவிட்டு ‘மேக்கப் போட முடியுமா?’ என்றார். போட்டுவிட்டுச் சென்றேன்.

முதல் ஷாட் நான் வீட்டுக்குள் என்டர் ஆகும் காட்சி. அந்தக் காட்சியை ஷூட் செய்துவிட்டு இயக்குநர் சித்திக் விஜய்யிடம், ‘சார் பர்ஃபெக்ட்டான சாய்ஸ்’ என்று கூறினார்.” என்றார் உற்சாகத்துடன்.

இயக்குநர் சித்திக் பற்றி கூறுகையில், “நான் ஒவ்வொரு காட்சிகளுக்கு தயாராகி நடிப்பதை ரசிப்பார் சித்திக். ‘ஃப்ரெண்ட்ஸ்’ ஒரிஜினலாக மலையாளத்தில் வந்தது. அதிலிருந்து நான் தமிழில் நிறைய விஷயங்களை மெருகேற்றி செய்து நடித்திருந்தேன்.

அதைக்காட்டிலும் தெலுங்கில் இன்னும் பல மடங்கு சிரத்தைக் கொடுத்து நடித்தேன். சித்திக் சார் படங்களைப் பொறுத்தவரை கதைக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கப்படும்.

தனி நபர்களுக்காக அவர் கதை எழுதமாட்டார். அவரின் கதைக்குள் கதாபாத்திரமாக நாம் செல்லவேண்டும்.

அப்படிச் செல்லும் அனைவருக்கும் பேர் வாங்கிக் கொடுப்பார். மேலும், நான் நன்றாக நடித்ததற்காக அவரின் அடுத்த படத்தில் ஒரு பாடலில் மட்டும் என்னை ஆட வைத்தார் சித்திக்” என்றார்.

Sriman
Sriman

விஜய் பற்றி பகிர்ந்துகொண்ட ஶ்ரீமன், “‘ஃப்ரெண்ட்ஸ்’ படத்தில் ‘பெண்களோடு போட்டி போடும்’ பாடல் ஷூட்டின்போது, ‘ஸ்ரீமன் நன்றாக டான்ஸ் ஆடுவார்’ என்று விஜய் தான் சித்திக்கிடம் கூறினார்.

அந்தப் பாடலில் சித்திக் என்னையும் ஆட வைத்து அழகு பார்த்தார். மேலும், 25 வருடங்களுக்குப் பின் இந்த ரகசியத்தை உடைக்கிறேன்.

கெளதம் கதாபாத்திரத்திற்கு இயக்குநரிடம் என் பெயரைப் பரிந்துரைத்த விஜய் என்னைத் தொடர்பு கொண்டு, ‘டேய் இந்தக் கேரக்டர் மிஸ் பண்ணிடாத, உன் பெயரைத்தான் சொல்லிருக்கோம்’ என்று பர்சனலாகச் சொன்னார்.

நான் அந்த ஷூட்டை விட்டுவிட்டு வரவேண்டும் என்று முடிவெடுத்ததற்கு இது முக்கியமான காரணம்.” என்றார்.

“படத்தில் சார்லி சாரின் போஷன்கள் எனக்கு மிகவும் பிடிக்கும், வடிவேல் சாருக்கும் அந்தத் திரைப்படம் திருப்புமுனையாக அமைந்தது.

வடிவேல் சாருக்கு முழுக்க முழுக்க மிகைப்படுத்தப்பட்ட கதாபாத்திரம் அதற்கு நேர்மறையாக சார்லி சாரின் கதாபாத்திரம் அமைந்திருக்கும். அது சிறப்பானதொரு காம்போவாக அமைந்தது.

சூர்யாவுக்கும் அது முக்கியமான படமாக அமைந்தது. மேலும், இளையராஜா படத்தை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் சென்றார். படத்தின் இறுதிக் காட்சியில் சூர்யாவும் விஜயும் என்னுடன் சண்டையிடும்படி அமைந்திருக்கும்.

நாங்கள் மூவருமே ஸ்டண்ட் பயிற்சி செய்தவர்கள். மேலும், அப்போது நாங்கள் மூவருமே 25 வயதுக்கு உட்பட்டவர்களாக இருந்தோம். அதனால் மூன்று நாட்கள் நடக்க வேண்டிய ஷூட் இரண்டரை நாட்களில் நடந்து முடிந்தது.” என்று கூறி மகிழ்ந்தார்.

Vijay with Sriman
Vijay with Sriman

இறுதியாக, “குடும்ப நட்பு உறவுகள் சார்ந்த திரைப்படம் இப்போதெல்லாம் முன்பு போல் இல்லை. இன்றைய சூழலுக்கேற்ப மாறிவருகிறது.

அந்த காலங்களில் நாங்கள் நட்பாகவும் குடும்பமாகவும் எப்படி இருந்தோம் என்பதைப் பேசுவதில் ‘ஃப்ரெண்ட்ஸ்’ ஒரு முக்கியமான படம். நட்பு எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு ஒரு உதாரணம் இத்திரைப்படம்.

என் வாழ்க்கையின் மறக்க முடியாத படங்களில் ‘ஃப்ரெண்ட்ஸ்’ திரைப்படமும் ஒன்று.” என நெகிழ்ச்சியாகப் பேசினார்.

-ரொ.கோகுலசரண்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.