நடிகர் விஷால் தற்போது ‘மகுடம்’ படத்தில் நடித்து வருகிறார். ‘ஈட்டி’ பட இயக்குநர் ரவி அரசு முதலில் இப்படத்தை இயக்கி வந்த நிலையில் இப்போது விஷால்தான் படத்தை இயக்கி வருகிறார்.
சமீபத்தில் அவருடைய தயாரிப்பு நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் வெளிவந்த பேட்டியில் அவருடைய கரியரின் சில முக்கிய விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார்.

தற்போது அந்தப் பேட்டியின் இரண்டாம் பாகம் வெளிவந்திருக்கிறது. அதிலும் சில சுவாரஸ்யமான தகவல்களை விஷால் பகிர்ந்திருக்கிறார்.
நடிகர் கார்த்தியுடனான நட்பு குறித்து விஷால் பேசுகையில், “நான் சாய் தன்ஷிகாவிடம் பேசுவதைவிட கார்த்தியிடம்தான் அதிகமாகப் பேசுவேன். நான் ஒரு நாளைக்கு 6 முறையாவது அவனுக்கு கால் செய்வேன்.
அவனும் அவனுடைய மனைவியைவிட என்னிடம்தான் அதிகமாகப் பேசிட்டு இருப்பான்” என்றவர், “ஷூட்டிங் ஸ்பாட்ல நிறைய பேர் வந்து ‘உங்களை கல்யாணம் பண்ணிக்கணும்னு’ சொல்வாங்க. ‘எதை வச்சு அதை முடிவு பண்ணினீங்க. திரையில பார்க்கிற விஷால் வேற’னு சொல்லிடுவேன். ஒரு பெண் என்னுடைய முகத்தை இரத்தத்துல வரைந்து எடுத்திட்டு வந்திருக்காங்க.
‘சிவபாதிகாரம்’ படப்பிடிப்பின்போது ஒரு பெண் திடீரென எனக்கு முத்தம் கொடுத்திட்டாங்க. நான் உடனே அவரிடம் ‘இப்படிச் செய்யாதீங்க’னு சொல்லிட்டேன்.

என்னுடைய புகழை யூஸ் பண்ணி எந்தப் பெண்ணையும் நான் தவறாகப் பயன்படுத்தினது கிடையாது. என்னைப் பற்றின வதந்திகளுக்கு நானே முற்றுப்புள்ளி வச்சிடுவேன். ‘மார்க் ஆண்டனி’ படத்துடைய கிளைமாக்ஸ்ல என்னை விமர்சித்த மாதிரி நான் விமர்சிப்பேன்.
அதுபோல எப்பவும் என்னையே நான் விமர்சிப்பேன். ஒரு முறை நான் சாப்பிடுறதுக்கு முன்னாடி கடவுளை வேண்டிக்கிட்ட விஷயத்திற்காக என்னை ட்ரோல் பண்ணினாங்க. அதனால அதையும் இப்போ நிறுத்திட்டேன்” எனக் கூறினார்.