"நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் கும்பகோணம் தான்" – நடிகர் ஜெயராம் நெகிழ்ச்சி!

ஜெயராம் மலையாளம், தமிழ், தெலுங்கு எனப் பல மொழிப்படங்களில் வலம் வருபவர்.

 மலையாளத்தில் 1986-ல் “அபரன்” என்ற படத்துடன் ஆரம்பித்த அவரது திரைப்பயணம். தமிழ் திரையுலகிற்கு 1992-ஆம் ஆண்டு ‘கோகுலம்’ படம் மூலம் பிரபலமானார்.

தமிழில் ‘தெனாலி’, ‘துப்பாக்கி’, ‘உத்தம வில்லன்’, ‘பஞ்சதந்திரம்’, ‘பொன்னியின் செல்வன்’, ‘காந்தாரா’ உள்ளிட்ட படங்கள் மூலம் தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர்.

கும்பகோணம், சிதம்பரத்தில் நடிகர் ஜெயராம்
கும்பகோணம், சிதம்பரத்தில் நடிகர் ஜெயராம்

மலையாளம், தெலுங்குத் திரையுலகில் பிஸியாக இருக்கும் இவர், இன்று கும்பகோணத்திற்கு வந்து, அங்கிருக்கும் கோவில்களில் தரிசனம் செய்து தனது அம்மாவின் சொந்தங்களை நலம் விசாரித்தார். மேலும் மனைவியுடன் சிதம்பரம் நடராஜர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசியவர், “என்னுடைய அம்மா கும்பகோணம், அப்பா பாலக்காடு. நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே கும்பகோணத்தில்தான். சிதம்பரம் கோவிலுக்கு 30 வருஷத்துக்கு முன்னாடி வந்தது. அதன் பிறகு இங்கு வருவதற்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை. கடவுள் அருளால் இப்போது மீண்டும் அதே கோவிலுக்குச் சென்று நான் சாமி தரிசனம் செய்தேன். மனதிற்கு ரொம்பவும் மகிழ்ச்சியாக இருக்கு.

கும்பகோணம், சிதம்பரத்தில் நடிகர் ஜெயராம்
கும்பகோணம், சிதம்பரத்தில் நடிகர் ஜெயராம்

கும்பகோணம் கும்பேஸ்வரர் கோவில், சாரங்கபாணி கோவில் வாசலில்தான் என்னுடைய சின்ன வயசு நாள்களில் சுற்றித் திரிந்திருக்கிறேன். இப்போ மீண்டும் அங்கெல்லாம் செல்வது மகிழ்ச்சியாக இருக்கிறது” என்றார்.

தனது அடுத்தடுத்த திரைப்படங்கள் குறித்துப் பேசியவர், “தனுஷ் சார் கூட ஒரு படத்தில் நடிக்கிறேன். நானும் ஊர்வசியும் ரொம்ப வருஷத்துக்குப் பிறகு பாண்டிராஜ் படத்தில் சேர்ந்து நடிக்கிறோம். தெலுங்கில் 2,3 படங்களில் நடிக்கிறேன். கன்னடத்தில் சிவராஜ் குமார் சார் படத்தில் நடிக்கிறேன். மலையாளத்தில் ஒரு படத்தில் நடிக்கிறேன்” என்று கூறுகிறார் ஜெயராம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.