கொங்குப் பகுதியைச் சேர்ந்த கிராமம் ஒன்றில், தன் மகள், மகனுடன் வசித்து வருகிறார் விவசாயக் கூலித்தொழிலாளரான நல்லபாடன் (புரோட்டா முருகேசன்).
சிறுவயதில் கிணற்றில் விழுந்த மகனைக் காப்பாற்ற, ஊர் எல்லைச்சாமியான ஒண்டிமுனிக்கு தான் வளர்த்து வரும் கிடாயைப் படையலிடுவதாக வேண்டிக்கொள்கிறார்.

மகனும் பிழைத்துக்கொள்கிறான். ஆனால், ஊரிலுள்ள இரண்டு பண்ணாடிகளின் (நிறைய விவசாய நிலங்களை வைத்திருக்கும் ஆதிக்கச் சமூகத்தினர்) சண்டையால், ஒண்டிமுனிக்கு நடத்த வேண்டிய திருவிழா பல ஆண்டுகளாகத் தள்ளிப்போகிறது.
எப்படியாவது திருவிழாவை நடத்தி, கிடாயைப் படையலிடும் முயற்சியில் இறங்குகிறார் நல்லபாடன். ஆனால், இம்முயற்சிகளில் பல பிரச்னைகள் கிளம்ப, அவற்றைச் சமாளித்து, திருவிழாவை அவர் நடத்தினாரா என்பதே அறிமுக இயக்குநர் சுகவனம் இயக்கியிருக்கும் ‘ஒண்டிமுனியும் நல்லபாடனும்’ படத்தின் கதை.
ஆற்றாமை, பிள்ளைகள் மீதான பாசம், வைராக்கியம், தன் உழைப்பைச் சுரண்டுபவர்களிடம் வளைந்து குழைந்து அடிபணியும் இடம் எனப் படம் முழுவதும் நல்லபாடன் கதாபாத்திரத்தை ரத்தமும் சதையுமாகக் கொண்டு வந்திருக்கிறார் புரோட்டா முருகேசன். அதேநேரம், சில இடங்களில் அந்த மீட்டர் ஓவர் டோஸ் ஆவதும் துருத்திக்கொண்டு நிற்கிறது.
வஞ்சக பண்ணாடியாக கார்த்திகேசன், நல்லபாடனின் மகனாக விஜயன் தியா, மகளாக சித்ரா நாகராஜன் ஆகியோர் தங்கள் கதாபாத்திரங்களுக்கு நியாயம் செய்கிறார்கள். கிராமத்தில் உலாவும் ஏனைய துணை கதாபாத்திரங்களிடம் இன்னும் எதார்த்தமான நடிப்பை வாங்கத் தவறியிருக்கிறார் இயக்குநர்.

கொங்குப் பகுதியின் நிலவியலையும், வெக்கையையும் ஒரு கதாபாத்திரமாகவே மாற்றியிருக்கிறது ஜெ.டி. விமலின் ஒளிப்பதிவு. அதேநேரம், பல லாங் ஷாட்கள் ‘நச்’ சொல்ல வைத்தாலும், சில லாங் ஷாட்கள் தேவையை மீறி நிற்கின்றன.
காதல் காட்சிகளிடமும், ஆங்காங்கே வழி தவறும் கிளைக்கதைகளிடமும் கண்டிப்பைக் காட்டத் தவறுகிறது சதீஷ் குரோசோவாவின் படத்தொகுப்பு.
நடராஜன் சங்கரனின் பின்னணி இசை, சில உணர்வுபூர்வமான காட்சிகளுக்கு உரமூட்டியிருக்கிறது என்றாலும், அமைதியைக் கடைப்பிடிக்க வேண்டிய தருணங்களிலும் கூட தலைதூக்கும் மேற்கத்தியப் பின்னணி இசை துறுத்தல்.
நல்லபாடன் வீடு, நிலவுடைமையாளர்களின் வீடுகள், விவசாயத் தொழிற்கூடங்கள் என எதார்த்தம் மாறாத உலகைக் கச்சிதமாகக் கட்டி எழுப்பியிருக்கிறது ஜெ.கே.ஆண்டனியின் கலை இயக்கம்.

ஓர் எளிய கிராமத்துக் கதையை, தேவையான கிளைக்கதைகளால் சுவாரஸ்யமாக்கி, பண்ணையடிமைத்தனம், அதில் விவசாயத் தொழிலாளர்களுக்கு நடக்கும் உழைப்புச் சுரண்டல், இவற்றைக் காக்கும் சாதிய அடுக்கு எனப் பல காத்திரமான விஷயங்களைப் பேச முயன்றிருக்கிறார் இயக்குநர்.
ஊர் பண்ணாடிகளுக்கு இடையிலான சண்டை, இரண்டாம் பாதியில் ஊருக்கு வரும் பொதுப் பிரச்னை, குடும்பத்தின் பணத்தேவை போன்ற கிளைக்கதைகள் ஒன்றோடு ஒன்று இணைந்து கைகொடுத்தாலும், நல்லபாடன் மகனின் காதல் கதை அளவை மீறி ஓடுவது கதையின் மையத்திலிருந்து விலக வைக்கிறது.
கொங்கு கிராமத்திலிருக்கும் விவசாய உற்பத்தி முறை, அது சாதிய அமைப்பின் சுரண்டல் தன்மையோடு இயைந்து இயங்கும் முறை, சிறு சிறு விவசாயத் தொழில்கள், நித்தம் சுரண்டப்படும் அத்தொழிலாளர்கள், அவர்கள் வைத்திருக்கும் சிறு நிலம், அவற்றைப் பறிக்கும் அரசியல், உழைப்பவர்களுக்கு இறை நம்பிக்கையும், கோயிலும் இருந்தாலும் அதன் மீதான முழு சுதந்திரமும் அவர்களுக்கு இல்லாமல் இருப்பது எனப் பல சமூக மடிப்புகளை, நுணுக்கமாக எல்லாக் காட்சிகளிலும் பேசியபடியே நகர்கிறது திரைக்கதை. அவை துருத்தாமல் மையக் கதையோடு ஒன்றியிருப்பது படத்தின் பலம்.
நல்லபாடனின் மகன் காதலிக்கும் பண்ணாடி வீட்டுப் பெண், நல்லபாடனின் வீட்டிற்கு வந்து நிற்கும் காட்சி, வசனங்களே இல்லாமல் படமாக்கப்பட்டிருக்கும் முறை அதன் வீரியத்தை இன்னும் ஆழமாக்குகிறது.

இவ்வாறாகப் பல காட்சிகள் அவற்றுக்கான வீரியத்தைக் கடத்தியிருந்தாலும் மொத்தமாகவே திரைமொழியாக இன்னுமே மெனக்கெட்டிருக்கலாம். ஆங்காங்கே விலகியோடும் திரைக்கதையும் அயற்சியைக் கொடுக்கிறது.
கதையின் நாயகர் நல்லபாடனின் கவலையும் பிரச்னைகளும் தெளிவாகச் சொல்லப்பட்டுவிட்ட போதிலும், மீண்டும் மீண்டும் அவற்றைப் பேசியபடியே சில காட்சிகளைச் சுழலவிட்டதும் அந்த அயற்சியை அதிகப்படுத்துகிறது.
எழுத்தில் நல்லதொரு சமூகப் படைப்பாக மிளிரும் நல்லபாடனின் கதைக்கு, திரைக்கதையிலும் பாடுபட்டிருந்தால் முக்கியமான படமாகியிருக்கும்.