தமிழ்நாடு இசை மற்றும் கவின் பல்கலைக்கழகம் சார்பில் நடிகர் சிவக்குமாருக்கு கௌரவ டாக்டர் பட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (நவ.28) வழங்கியிருக்கிறார்.
கௌரவ டாக்டர் பட்டத்தைப் பெற்ற பிறகு, சிவகுமார் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார்.
“நான் பிறந்து 10 மாதங்களிலேயே எனது தந்தை இறந்துவிட்டார். அவர் கருப்பா? சிவப்பா? என்று கூட எனக்கு தெரியாது. தனி ஆளாக எனது அம்மாதான் என்னை வளர்த்து ஆளாக்கினார்.

அந்தச் சமயத்தில் எங்களிடம் எந்த வசதியும் கிடையாது. தண்ணீர், மின்சாரம் என எந்த வசதியும் எனது ஊரில் இருக்காது. அப்படியான ஒரு ஊரில் முதன் முதலில் பத்தாம் வகுப்பு முடித்து தேர்ச்சி பெற்றது நான்தான்.
என்னுடன் படித்தவர்கள் எல்லாம் என்ஜினீயராக வேண்டும், டாக்டராக வேண்டும், வக்கீலாக வேண்டும் என்று நினைத்தார்கள். ஆனால் எனக்கு ஓவியராக வேண்டும் என்ற ஆசை இருந்தது.
சென்னைக்கு வந்த நான் மோகன் ஆர்ட்ஸ் என்ற கம்பெனியில் சிவாஜி கணேசனின் பரிந்துரையில் சேர்ந்தேன். அதன் பிறகு ஓவியக் கல்லூரியில் சேர்ந்து ஓராண்டு படித்தேன்.
விடுமுறை நாட்களில் தஞ்சாவூர், மதுரை போன்ற இடங்களுக்குச் சென்று அங்குள்ள கோயில்களில் அமர்ந்து அங்குள்ளவற்றை ஓவியமாக வரைவேன்.
இந்தியா முழுவதும் சுற்றி நான் ஓவியங்களை வரைந்திருக்கிறேன். ஆனால் அதற்கெல்லாம் மதிப்பு இல்லை என்று சொல்லிவிட்டார்கள். வேறு வழியில்லாமல் திரைப்படத்துறைக்குச் சென்றேன்.

அந்தக் காலகட்டத்தில் சிவாஜி கணேஷன், எம்ஜிஆர் எல்லாம் உச்சத்தில் இருந்தார்கள். பிறகு என்னுடைய முகம் நன்றாக இருக்கிறது என்று படங்களில் கடவுள் வேஷம் போட்டு நடிக்க வாய்ப்பு கொடுத்தார்கள்.
நாடக நடிப்பில்லாமல் ஒன்றும் செய்ய முடியாது என்று இந்தியா முழுவதும் சென்று 1000 நாடகங்களில் நடித்தேன். அந்த அனுபவங்களை வைத்து மீண்டும் படங்களில் நடிக்க ஆரம்பித்தேன்.
40 வருஷம் சினிமாவில் பயணித்துவிட்டது போதும் என்ற முடிவெடுத்த பிறகுதான் பேச்சாளரானேன். கம்பராமாயணம், மகாபாரதம் ஆகியவற்றை ஆராய்ச்சி செய்து மேடைகளில் பேசியிருக்கிறேன்.
ஓவியர், நடிகர், பேச்சாளர் என்ற தகுதியின் அடிப்படையில் தான் இந்த விருதை எனக்கு கொடுத்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது” என பேசியிருக்கிறார்.