மும்பை,
ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் மராட்டிய மாநிலம் நாக்பூரில் நேற்று நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார். விழாவில் அவர் பேசியதாவது:-
“ஒரு காலத்தில் ஒட்டுமொத்த தகவல் தொடர்பும், அன்றாட பணிகளும், பகிர்தலும் சமஸ்கிருதத்தில் இருந்தது. தற்போது சில அமெரிக்க பேராசிரியர்கள் நமக்கு சமஸ்கிருதம் கற்று தருகிறார்கள். உண்மையில் நாம் தான் உலகிற்கு சமஸ்கிருதத்தை கற்று கொடுத்து இருக்க வேண்டும். பல குழந்தைகளுக்கு இன்று வீட்டில் பேசும் தாய் மொழியில் சாதாரண வார்த்தைகள் கூட தெரியவில்லை. சில இந்திய மக்களுக்கு நமது சொந்த (தாய்) இந்திய மொழிகளே தெரியாத நிலையை அடைந்து உள்ளோம்.
இதற்கு ஆங்கில வழிக்கல்வியை குறை சொல்ல முடியாது. வீட்டில் கூட நாம் இந்திய மொழியை பேசத் தயங்குவதால்தான் நிலைமை மோசமாகி உள்ளது. வீட்டில் நாம் நம் மொழியை பேசினால் இந்த நிலைமை மேம்படும். ஆனால் நாம் அதை செய்வதில்லை. இப்போது சாமியார்கள் கூட ஆங்கிலத்தில் பேசுகிறார்கள். அதை புரிந்து கொள்ள முடிகிறது. அதேநேரத்தில் மொழியியல் விருப்ப தேர்வுகள் மாறி வருவதையும் குறிக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.