ஜகார்த்தா,
ஆசியாவின் ஒரு பகுதியாக உள்ள இந்தோனேசியாவில் கடந்த வாரம் ஏற்பட்ட பெருவெள்ளம் தொடர்ச்சியாக, 3 மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. வடக்கு சுமத்ரா, மேற்கு சுமத்ரா மற்றும் அசே ஆகிய 3 மாகாணங்களில் 14 லட்சம் பேர் பாதிப்பை எதிர்கொண்டு உள்ளனர்.
அரிய நிகழ்வாக மலாக்கா ஜலசந்தியில் ஏற்பட்ட சென்யார் என்ற சூறாவளி புயலால் கனமழை பெய்தும், நிலச்சரிவு ஏற்பட்டும் மக்கள் பலர் பலியாகி உள்ளனர். இதுவரை 500 பேர் உயிரிழந்து உள்ளனர். 500-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளனர்.
ஆயிரக்கணக்கானோருக்கு, தேவையான அடிப்படை வசதிகள் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். அசே மாகாணத்தின் பிடீ ஜெயா பகுதியை சேர்ந்த அரினி அமலியா என்பவர் கூறும்போது, வெள்ள நீர் சுனாமி போன்று காணப்பட்டது. என்னுடைய பாட்டி, அவருடைய வாழ்நாளிலேயே மிக மோசம் வாய்ந்த சூழல் இது என கூறினார். அந்த அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என்று அரினி கூறினார்.
வெள்ளத்தில் பாலங்கள் அடித்து செல்லப்பட்டும், சாலைகள் சேறும் சகதியும் சூழ்ந்தும் காணப்படுகின்றன. பலர் 3 நாட்களாக சாப்பிட உணவு கிடைக்காமல் பரிதவித்து வருகின்றனர். தூய குடிநீர், இணையதள வசதி, மின் இணைப்பு வசதியின்றி பலர் அவதியடைந்து வருகின்றனர். தொடர்ந்து, மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.