ரஷிய கப்பல்கள் மீது தாக்குதல்… உக்ரைனை கடலில் இருந்தே துண்டித்து விடுவோம்: புதின் மிரட்டல்

மாஸ்கோ,

ரஷியா மற்றும் உக்ரைன் இடையே 3 ஆண்டுகளுக்கு மேலாக போர் நீடித்து வருகிறது. இந்நிலையில், கருங்கடலில் சென்று கொண்டிருந்த ரஷியாவின் 2 கப்பல்களை கடந்த வாரத்தில், நீருக்கடியில் இருந்து ஆளில்லா விமானம் கொண்டு உக்ரைன் தாக்குதல் நடத்தியது. இது ரஷியாவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். மிரட்டல் விடும் வகையில் பேசியுள்ளார்.

இந்நிலையில், ரஷியாவின் முன்னணி செய்தி நிறுவனத்தில் வெளியிடப்பட்ட செய்தியில், உக்ரைனை கடலில் இருந்தே துண்டித்து விடுவதே, இந்த தாக்குதல்களை தடுத்து நிறுத்துவதற்கான வழியாக இருக்கும் என புதின் கூறியுள்ளார்.

அவர் தொடர்ந்து, கருங்கடலில் கப்பல்களை உக்ரைன் தாக்குவது என்பது திருட்டுத்தனம் ஆகும். பொதுவான கடல் பகுதி கூட இல்லாமல், மற்றொரு நாட்டின் சிறப்பு பொருளாதார மண்டல பகுதியில் தாக்குதல் நடந்திருப்பது என்பது திருட்டுத்தனம் ஆகும். உக்ரைனின் இந்த திருட்டுத்தனத்திற்கு ஆதரவு தரும் நாடுகளின் கப்பல்களுக்கு எதிராக பதிலடி நடவடிக்கைகளை எடுப்பது பற்றி ரஷியா பரிசீலனை மேற்கொள்ளும் என குறிப்பிட்டு உள்ளார்.

உக்ரைன் துறைமுகங்கள் மீது ரஷியா தாக்குதலை விரிவுப்படுத்தும். இந்த துறைமுகங்களுக்குள் நுழையும் கப்பல்கள் மீதும் தாக்குதல் நடத்தப்படும் என்றும் புதின் கூறினார்.

இந்த தாக்குதல்களில் அந்த இரு கப்பல்களும் கடுமையாக சேதமடைந்து உள்ளன. செயல்பாட்டை முற்றிலும் நிறுத்தி விட்டன என உக்ரைன் வட்டாரங்கள் தெரிவித்தன. இது, ரஷிய எண்ணெய் போக்குவரத்துக்கு ஒரு பெரிய பாதிப்பை உண்டு பண்ணியிருக்கும் என்றும் தெரிவித்தது. கடந்த வெள்ளி மற்றும் சனி கிழமைகளில் அடுத்தடுத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டு உள்ளன.

நேட்டோவில் சேரும் முடிவை உக்ரைன் கைவிட கோரியும், ராணுவ நடவடிக்கை என்ற பெயரிலும் உக்ரைன் மீது 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ந்தேதி ரஷியா தாக்குதலில் ஈடுபட்டது. உக்ரைனை நிலம், நீர் உள்ளிட்ட பகுதிகளில் சூழ்ந்து கொண்டு ரஷியா தீவிர போர் தொடுத்தது.

தொடக்கத்தில் உக்ரைனின் கீவ், கார்கிவ், டொனெட்ஸ்க் உள்ளிட்ட பல நகரங்களை ரஷியா கைப்பற்றியது. எனினும், அவற்றை உக்ரைன் பதிலடி கொடுத்து பின்னர் மீட்டது. போரானது 3 ஆண்டுகளை நிறைவு செய்தும் தொடர்ந்து நீடித்து வருகிறது. உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் ஆயுதங்கள் மற்றும் நிதி உதவியை வழங்கி வருகின்றன.

ரஷியாவுக்கு, நட்பு நாடான வடகொரியா, ராணுவ தளவாடங்கள் மற்றும் வீரர்களை அனுப்பி மறைமுக உதவி செய்கிறது என கூறப்படுகிறது. போரால் பெண்கள், குழந்தைகள் மற்றும் வீரர்கள் என இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கில் பலியாகி உள்ளனர். லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். லட்சக்கணக்கானோர் வீடுகளை விட்டு அடைக்கலம் தேடி வேறு இடங்களுக்கு தப்பியோடி விட்டனர். போரை முடிவுக்கு கொண்டு வரும் அமெரிக்காவின் மத்தியஸ்த பேச்சுவார்த்தை முயற்சியில் பெரிய அளவில் பலன் ஏற்படவில்லை.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.