ஆமதாபாத்,
18-வது சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஆமதாபாத், ஐதராபாத், கொல்கத்தா, லக்னோ ஆகிய நகரங்களில் நடந்து வருகிறது. இதன் ‘எலைட்’ பிரிவில் பங்கேற்றுள்ள 32 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு தங்களுக்குள் மோதி வருகின்றன.
இதில் கொல்கத்தாவில் நடந்த ஒரு ஆட்டத்தில் (பி பிரிவு) மராட்டிய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் பீகாரை வீழ்த்தி 2-வது வெற்றியை தனதாக்கியது. இதில் வைபவ் சூர்யவன்ஷி சதத்தின் (ஆட்டமிழக்காமல் 108 ரன், 61 பந்து, 7 பவுண்டரி, 7 சிக்சர்) உதவியுடன் பீகார் நிர்ணயித்த 177 ரன் இலக்கை மராட்டிய அணி 19.1 ஓவர்களில் எட்டிப்பிடித்தது. கேப்டன் பிரித்வி ஷா 66 ரன்கள் (30 பந்து, 11 பவுண்டரி, ஒரு சிக்சர்) எடுத்து அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார்.
14 வயதான சூர்யவன்ஷி இந்த ஆண்டில் அடித்த 3-வது சதம் இதுவாகும். மேலும் முஷ்டாக் அலி போட்டி வரலாற்றில் குறைந்த வயதில் சதம் அடித்த வீரர் என்ற சிறப்பை பெற்றார். இதற்கு முன்பு 2013-ம் ஆண்டு மராட்டிய வீரர் விஜய் ஜோல் 18 வயது 118 நாட்களில் சதம் கண்டதே சாதனையாக இருந்தது.
இதே பிரிவில் நடந்த இன்னொரு ஆட்டத்தில் கோவா 7 விக்கெட் வித்தியாசத்தில் மத்திய பிரதேசத்தை தோற்கடித்து 2-வது வெற்றியை பெற்றது. கோவா அணியில் வேகப்பந்து வீச்சாளர் அர்ஜூன் தெண்டுல்கர் 3 விக்கெட் வீழ்த்தினார்.