தமிழ் சினிமாவின் முதுபெரும் தயாரிப்பாளர் ஏவி.எம் சரவணன் இன்று இயற்கை எய்தினார்.
ரஜினிகாந்த் உள்ளிட்ட திரைப் பிரபலங்களும், முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் அவரின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
இந்த நிலையில் நடிகர் கமல் ஹாசன் ஏவி.எம் சரவணன் மறைவுக்கு இரங்கல் செய்தி வெளியிட்டிருக்கிறார்.

தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் வீடியோவில் கமல் ஹாசன், “திரு. ஏவி.எம் சரவணன் அவர்களுக்கும், எனக்கும் உள்ள உறவு என் அண்ணன் சந்திரஹாசன் அவர்களுக்கும், சாருஹாசன் அவர்களுக்கும், எனக்கும் உள்ள உறவு போன்றது.
இந்த உறவுக்கு என்ன பொருள் சொல்வது? இவர்களுக்கு எந்த மாதிரியான மரியாதை தருவது? என்ற ஒரு குழப்பம் சிறுவயதில் ஏற்பட்டதுண்டு.
நான் என் 20 வயதைத் தாண்டும்போது, இவர்களுக்குக் கொடுக்க வேண்டிய மரியாதை என்ன என்பதை என் அடிமனது முடிவு செய்துவிட்டது.
ஒரு தகப்பனுக்குக் கொடுக்க வேண்டிய மரியாதையைத்தான் இவர்களுக்குத் தருவது சரியாக இருக்கும் என்று எனக்குத் தோன்றியது. அப்படித்தான் என் மனதில் நினைத்துக் கொண்டு நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.
திரு. குகனுக்கு இருக்கும் சோகத்தில் எனக்கும் பங்கு இருப்பதாகவே நான் உரிமை கொண்டாடுகிறேன். இப்படி உரிமை கொண்டாடும் நான் தனி மரம் அல்ல.
ஏ.வி.எம் என்ற பெரும் தோப்பில் நடப்பட்ட ஒரு சிறு செடி. இன்று வளர்ந்து வந்திருக்கிறேன்.

பெருங்கலைஞர்கள் விட்டுச் சென்ற அடிச்சுவட்டில் என் சிறு பாதத்தை எப்படிப் பதித்து நடக்க வேண்டும் என்று பல பெரிய ஆசான்கள் எனக்கு இந்த வளாகத்தில், இந்தத் தோப்பில் இன்று கற்றுக் கொடுத்திருக்கிறார்கள். அவர்களையெல்லாம் நினைத்துப் பார்க்கிறேன்.
பேர் சொல்லும் பிள்ளையாக சரவணன் ஐயா அவர்கள் இருந்திருக்கிறார்கள். அவரின் சகோதரர்களும்தான். அது போன்ற ஒரு பிள்ளையாக நானும் இருக்க ஆசைப்படுகிறேன்.
என் ஆசையெல்லாம் இந்தத் தோப்பின் மூன்றாம் தலைமுறை தோன்றியிருக்கிறது. அவர்களும் என்னைப் போன்ற பல செடிகளை நட்டு இந்தப் பெரும் பள்ளியின் பெயர் நிலைத்திருக்கச் செய்ய வேண்டும்.
இதுதான் அண்ணாரின் மக்களாக நாம் செய்யும் கடமை என்று நான் நம்புகிறேன்.
மற்றபடி அந்த ஏவி.எம் வளாகமும், அங்கு வேலை செய்து ரிட்டையர் ஆனவர்களுக்கும், வேலையில் சேர வேண்டும் என்ற ஆசையில் இருப்பவர்கள் எல்லோருக்கும் இருக்கும் சோகம், அதில் நானும் பங்கு கொள்கிறேன்.
உங்கள் பெயர் சொல்லும் பிள்ளைகளில் ஒருவனின் அஞ்சலி : pic.twitter.com/XWNx731BJc
— Kamal Haasan (@ikamalhaasan) December 4, 2025
வெளி உலகத்திற்கு இதுபோன்ற பின்னணி ஆளுமைகள் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. நாங்கள் அவரை வணங்குவதற்கான காரணம் எங்கள் வாழ்க்கையைப் பார்த்தாலே புரிந்துவிடும்.
முக்கியமாக எங்கள் கலை வாழ்க்கை. அவருக்கு நன்றி சொல்லும் ஒரே வழி அவர் கண்ட பாதையில் வீறுநடை போட்டு நடப்பதுதான். நன்றி ஐயா, அனைத்திற்கும்” என்று தெரிவித்திருக்கிறார்.