வாஷிங்டன்
மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் உள்நாட்டுப்போர் பல ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. அந்நாட்டில் பல்வேறு கிளர்ச்சி குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. அதேவேளை, காங்கோ நாட்டின் கிழக்கு பகுதியில் ருவாண்டா நாடு அமைந்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே காங்கோவின் வடக்கு கிவூ, தெற்கு கிவூ உள்ளிட்ட பல்வேறு மாகாணங்களில் கனிம வளங்கள் அதிக அளவில் காணப்படுகிறது.
இதனிடையே, காங்கோ, ருவாண்டா இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது. காங்கோவில் செயல்பட்டு வரும் எம்-23 என்ற கிளர்ச்சிக்குழுவுக்கு ருவாண்டா ஆதரவு அளித்து வருகிறது. எம்-23 கிளர்ச்சிக்குழு காங்கோவில் கனிம வளங்கள் கொண்ட பகுதிகளை கைப்பற்ற முயற்சித்து வருகிறது.
இந்நிலையில், காங்கோ, ருவாண்டா இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்கா தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் இருநாடுகளும் மோதலை கைவிட்டு அமைதிக்கு திரும்ப ஒப்புக்கொண்டன. இதையடுத்து, அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் முன்னிலையில் காங்கோ, ருவாண்டா இடையே அமைதி ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தை தொடர்ந்து காங்கோவில் உள்ள கனிம வளங்களை அமெரிக்க நிறுவனங்கள் வெட்டி எடுக்க ஒப்பந்தம் கையெழுத்தானது.