Virat Kohli: விசாகப்பட்டினத்தில் நடக்க உள்ள இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டிக்கு ஆரம்பத்தில் ரசிகர்களிடம் பெரிய ஆர்வம் இல்லை. ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி ஸ்டேடியத்தில் டிக்கெட்டுகள் விற்றுத் தீராமல் இருந்தன. ஆனால், விராட் கோலியின் மாயாஜாலத்தால், இப்போட்டிக்கான டிக்கெட் மளமளவென விற்றுத் தீர்ந்துவிட்டது. விராட் கோலி அடுத்தடுத்து இரு போட்டிகளில் செஞ்சுரி அடித்ததாலும், இரண்டாவது போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்று இப்போது போட்டித் தொடர் சமனில் இருக்கும் நிலையில், மூன்றாவது போட்டியில் வெற்றி பெற்று யார் இந்த ஒருநாள் போட்டி தொடரைக் கைப்பறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவுவதாலும் இப்போட்டி மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதனாலேயே இப்போட்டிக்கான டிக்கெட்டுக்கு டிமாண்ட் அதிகரித்துள்ளது.
Add Zee News as a Preferred Source
டிக்கெட் விற்பனையில் ஏற்பட்ட அதிரடித் திருப்பம்
ஆந்திர கிரிக்கெட் அசோசியேஷன் (ACA) அதிகாரிகள் நவம்பர் 28 அன்று டிஜிட்டல் முறையில் முதல் கட்ட டிக்கெட் விற்பனையைத் தொடங்கியபோது, எதிர்பார்த்த வரவேற்பு இல்லை. டிசம்பர் 6 சனிக்கிழமை நடக்கவிருந்த இந்த ஆட்டத்திற்கான தேவையை அதிகரிக்க, மைதானத்துக்கு வெளியே கவுண்டர்களில் நேரடி விற்பனையைத் தொடங்கலாம் என்று கூட நிர்வாகம் யோசித்துக் கொண்டிருந்தது. ஆனால், சரியாக நவம்பர் 30 அன்று ராஞ்சியில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் விராட் கோலி ஒரு சதத்தை விளாசியபோது கதை மாறியது.
இதுகுறித்து ஆந்திரா கிரிக்கெட் சங்க நிர்வாகி பேசும்போது, “முதல் கட்ட டிக்கெட்டுகளுக்கு வரவேற்பு இல்லை. ஆனால், ராஞ்சியில் கோலியின் சதம் விழுந்த பிறகு, இரண்டாவது மற்றும் மூன்றாவது கட்ட டிக்கெட்டுகள் நிமிடங்களில் விற்றுத் தீர்ந்துவிட்டன. ஒன்று கூட மீதமில்லை” என்றார். விராட் கோலியின் தொடர்ச்சியான இந்த ஆட்டம்தான், விசாகப்பட்டினம் போட்டிக்கு ரசிகர்களிடையே ஏற்பட்டிருக்கும் இந்த எதிர்பார்ப்புக்கு முக்கிய காரணம் என்றும் அவர் கூறியுள்ளார்.
விராட் கோலியின் அபார ஆட்டம்
டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து விராட் கோலி ஓய்வு பெற்றுவிட்டார். இதனால், இந்த இரு பார்மேட்டிலும் ரசிகர்கள் அவரை மைதானத்தில் பார்ப்பதற்கான வாய்ப்பு இல்லை. ஒருநாள் போட்டியில் மட்டுமே விளையாடிக் கொண்டிருக்கும், அவரை விசாகப்பட்டினம் போட்டிக்குப் பிறகு மீண்டும் மைதானத்தில் பார்க்க பல மாதங்கள் ரசிகர்கள் காத்திருக்க வேண்டியுள்ளது. இப்போது நல்ல பார்மில் அவர் இருப்பதால், இப்போட்டியை நேரில் பார்க்க வேண்டும் என ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர்.
இரு போட்டிகளிலும் சதம்
ராஞ்சியில் அவர் அடித்த 135 ரன்கள் ஒரு அற்புதமான ஆட்டமாகப் பார்க்கப்படுகிறது. வழக்கமான போட்டிப் பயிற்சி இல்லாததால் அவர் சற்றுத் தடுமாறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 11 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்களுடன் ஒரு அதிரடியான இன்னிங்ஸை ஆடினார். இதனையடுத்து ராய்ப்பூரில் நடைபெற்ற அடுத்த போட்டியில் 102 ரன்கள் எடுத்து ஆச்சரியப்படுத்தினார். இதனால், 3வது ஒருநாள் போட்டியிலும் அவர் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா – தென்னாப்பிரிக்கா 3வது போட்டி எப்போது?
இந்தியா – தென்னாப்பிரிக்கா 3வது போட்டி நாளை, டிசம்பர் 6 சனிக்கிழமை விசாகப்பட்டினத்தில் நடக்கிறது. இப்போட்டியிலும் விராட் சதமடித்தால் பல சாதனைகளை படைக்க வாய்ப்புள்ளது. அவர் ஏற்கனவே 2018-ல் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராகத் தொடர்ச்சியாக மூன்று ஒருநாள் சதங்களை அடித்துள்ளார். அதே 2018 ஆம் ஆண்டில், தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக ஆறு ஒருநாள் போட்டிகளில் மூன்று சதங்களை அவர் விளாசினார். மேலும், விசாகப்பட்டினம் மைதானம் கோலிக்கு மிகவும் பிடித்தமானதும் கூட. இங்கு விளையாடிய ஏழு போட்டிகளில், அவர் 97.83 என்ற சராசரியில் 587 ரன்களைக் குவித்துள்ளார். இதில் மூன்று சதங்கள் மற்றும் இரண்டு அரை சதங்கள் அடங்கும். இதனால், விசாக்கப்பட்டின போட்டியில் விராட் கோலியின் அற்புதமான ஆட்டத்தை இன்னொரு முறை பார்க்கலாம்.
About the Author

Karthikeyan Sekar
Karthikeyan Sekar
…Read More