நாடு முழுவதும் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 5.28 லட்சம் போக்சோ வழக்குகள் பதிவு

புதுடெல்லி,

பாலியல் குற்றங்களில் இருந்து 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர், சிறுமிகளை பாதுகாக்க வகை செய்யும் போக்சோ சட்டம் கடந்த 2012-ம் ஆண்டு மத்திய அரசால் இயற்றப்பட்டது. இந்த வழக்குகளை விரைவாக விசாரணை செய்து, குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனையை விரைந்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது.

இதையடுத்து, போக்சோ உள்ளிட்ட நிலுவையில் உள்ள வழக்குகளை விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி, கடந்த 2019-ம் ஆண்டு அக்டோபர் மாதம் சிறப்பு விரைவு கோர்ட்டுகள் நாடு முழுவதும் அமைக்கப்பட்டன. இதில், சிறுவர், சிறுமிகள் காமுகர்களால் வேட்டையாடப்படும் போக்சோ வழக்குகளை மட்டும் விசாரிக்கும் போக்சோ கோர்ட்டுகளும் அடங்கும்.

தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்பட 29 மாநிலங்களில் கடந்த செப்டம்பர் மாதம் 30-ந்தேதி வரையிலான நிலவரப்படி, 400 போக்சோ கோர்ட்டுகள் உள்பட 773 சிறப்பு விரைவு கோர்ட்டுகள் செயல்பட்டு வருகின்றன. இந்த சிறப்பு கோர்ட்டுகள் 3 லட்சத்து 50 ஆயிரத்து 685 வழக்குகளை முடித்து வைத்துள்ளன. இதில், போக்சோ கோர்ட்டுகள் மட்டும் 2 லட்சத்து 25 ஆயிரத்து 617 வழக்குகளை முடிவுக்கு கொண்டு வந்துள்ளன.

தேசிய நீதித்துறை தரவு தளத்தின்படி, கடந்த 2021 முதல் 2025 வரையிலான 5 ஆண்டுகளில் நாடு முழுவதும் 5 லட்சத்து 28 ஆயிரத்து 431 போக்சோ வழக்குகள் பதிவாகி உள்ளன. இவற்றில் 4 லட்சத்து 67 ஆயிரத்து 5 வழக்குகள் முடிவை எட்டியிருக்கின்றன. 61 ஆயிரத்து 426 வழக்குகள் இன்னும் நிலுவையில் உள்ளன.

தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 39 ஆயிரத்து 999 போக்சோ வழக்குகள் பதிவாகி உள்ளன. இவற்றில் 33 ஆயிரத்து 385 வழக்குகள் தீர்வு காணப்பட்டிருக்கின்றன. இன்னும் 6 ஆயிரத்து 614 வழக்குகள் தீர்க்கப்படாமல் இருக்கின்றன. நாடு தழுவிய அளவில் கடந்த 2-ந்தேதி நிலவரப்படி 35 ஆயிரத்து 434 போக்சோ வழக்குகள் 2 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ளன.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.