சிஎஸ்கே இந்த வீரரை டார்கெட் செய்வார்கள் – அஸ்வின் சொன்ன சீக்ரெட்!

ஐபிஎல் 2026 மினி ஏலம் நெருங்கி வரும் வேளையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வியூகம் என்னவாக இருக்கும் என்பது குறித்த சுவாரஸ்ய தகவல்களை இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் பகிர்ந்துள்ளார். குறிப்பாக, ஒரு இந்திய ஆல்ரவுண்டரை தூக்குவதிலேயே சிஎஸ்கே குறியாக இருக்கும் என்று அவர் கணித்துள்ளார். கடந்த 2025 சீசனில் எதிர்பார்த்த வெற்றியை பெற முடியாத சிஎஸ்கே அணி, இந்த முறை அணியை வலுப்படுத்த திட்டமிட்டுள்ளது. முக்கிய வீரர்களை விடுவித்ததன் மூலம், அணியின் கையில் தற்போது ரூ. 43.40 கோடி இருப்பு உள்ளது. மதிஷா பதிரானா போன்ற முக்கிய பந்துவீச்சாளரை விடுவித்தது ஒரு துணிச்சலான முடிவு என்றாலும், அது ஒரு பெரிய ஆல்ரவுண்டரை வாங்குவதற்கான திட்டத்தின் ஒரு பகுதி தான் என்கிறார் அஸ்வின்.

Add Zee News as a Preferred Source

முதல் குறி வெங்கடேஷ் ஐயர்

தனது யூடியூப் சேனலில் பேசிய அஸ்வின், “சிஎஸ்கே அணியின் முதல் டார்கெட் நிச்சயம் வெங்கடேஷ் ஐயர் ஆகத்தான் இருக்கும். ஒரு தரமான இந்திய வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் அணிக்கு தேவை. அந்த இடத்திற்கு வெங்கடேஷ் ஐயர் கச்சிதமாக பொருந்துவார்,” என்று தெரிவித்துள்ளார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடிய வெங்கடேஷ் ஐயர், கடந்த சீசனில் பெரிய அளவில் ஜொலிக்கவில்லை என்றாலும், அவரது திறமை மீது சிஎஸ்கே நம்பிக்கை வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர் ரூ. 2 கோடி அடிப்படை விலையுடன் இந்த ஏலத்தில் களமிறங்குகிறார்.

மேக்ஸ்வெல் விலகல்… அடுத்த சாய்ஸ் யார்?

வெளிநாட்டு ஆல்ரவுண்டர் இடத்தை பொறுத்தவரை, கிளென் மேக்ஸ்வெல்லை வாங்க சிஎஸ்கே திட்டமிட்டிருக்கலாம். ஆனால், அவர் ஏலத்திலிருந்து விலகிவிட்டதால், இங்கிலாந்தின் அதிரடி வீரர் லியாம் லிவிங்ஸ்டன் அந்த இடத்தை பிடிக்க வாய்ப்புள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியால் விடுவிக்கப்பட்ட லிவிங்ஸ்டன், தற்போது ஐஎல் டி20 தொடரில் சிறப்பான ஃபார்மில் இருப்பது சிஎஸ்கே-வின் கவனத்தை ஈர்த்துள்ளது.

பதிரானாவை விடுவித்தது ஏன்?

இலங்கை வேகப்பந்து வீச்சாளர் மதிஷா பதிரானாவை விடுவித்தது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து பேசிய அஸ்வின், “ஆண்ட்ரே ரஸ்ஸல் அல்லது கேமரூன் கிரீன் போன்ற மிகப்பெரிய ஆல்ரவுண்டர்கள் ஏலத்திற்கு வருவார்கள் என்று சிஎஸ்கே எதிர்பார்த்தது. அவர்களை வாங்க பெரிய தொகை தேவைப்படும் என்பதால் தான் பதிரானாவை விடுவித்து பணத்தை சேமித்தனர். ஆனால், அவர்கள் ஏலத்திற்கு வராத சூழலில், அந்த பணத்தை வைத்து வேறு முக்கிய வீரர்களை வாங்க சிஎஸ்கே முயற்சிக்கும்,” என்று விளக்கமளித்தார். கடந்த சீசனில் சிவம் துபே பேட்டிங்கிலும், நூர் அகமது பந்துவீச்சிலும் மட்டுமே ஆறுதல் அளித்தனர். எனவே, இந்த ஏலத்தில் வெங்கடேஷ் ஐயர் மற்றும் லிவிங்ஸ்டன் போன்ற ஆல்ரவுண்டர்களை இணைப்பதன் மூலம் அணியின் சமநிலையை மீட்டெடுக்க சிஎஸ்கே நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

About the Author


RK Spark

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.