பார்முலா1 கார்பந்தயம்: இங்கிலாந்து வீரர் லான்டோ நோரிஸ் ‘சாம்பியன்’

அபுதாபி,

பார்முலா1 கார்பந்தயத்தின் 24-வது மற்றும் கடைசி சுற்றான அபுதாபி கிராண்ட்பிரி போட்டி அங்குள்ள யாஸ் மரினா ஓடுளத்தில் நேற்று நடந்தது. பட்டம் வெல்வதில் நடப்பு சாம்பியன் நெதர்லாந்தின் மேக்ஸ் வெர்ஸ்டப்பென், இங்கிலாந்தின் லான்டோ நோரிஸ், ஆஸ்திரேலியாவின் ஆஸ்கர் பியாஸ்ட்ரி ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவியதால் இறுதி சுற்று மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. இதில் பந்தய தூரமான 306.183 கிலோமீட்டர் இலக்கை நோக்கி வழக்கம் போல் 10 அணிகளைச் சேர்ந்த 20 வீரர்கள் காரில் சீறிப்பாய்ந்தனர்.

இதில் முதல்வரிசையில் இருந்து புறப்பட்ட வெர்ஸ்டப்பென் 1 மணி 26 நிமிடம் 7.469 வினாடிகளில் இலக்கை கடந்து வெற்றி பெற்றார். அவருக்கு 25 புள்ளிகள் கிடைத்தது. ஆனால் அது அவருக்கு ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை வெல்ல போதுமானதாக இல்லை. ஏனெனில் அவரது பிரதான எதிராளியான லான்டோ நோரிஸ் டாப்-3 இடத்திற்குள் வராமல் இருந்தால் மட்டுமே வெர்ஸ்டப்பெனுக்கு மகுடம் கிடைக்கும் நிலைமை காணப்பட்டது. ஆனால் லான்டோ நோரிஸ் 3-வதாக வந்து 15 புள்ளிகளை பெற்றதுடன் பட்டத்தையும் உறுதி செய்தார். வெர்ஸ்டப்பெனை விட 12.594 வினாடி பின்தங்கிய பியாஸ்ட்ரி 2-வதாக வந்து அதற்குரிய 18 புள்ளிகளை வசப்படுத்தினார்.

24 சுற்றுகள் முடிவில் இங்கிலாந்து வீரர் லான்டோ நோரிஸ் (மெக்லரன் அணி) மொத்தம் 423 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்து முதல்முறையாக பார்முலா1 கார்பந்தய சாம்பியன்ஷிப் பட்டத்தை தட்டிச் சென்றார். அப்போது உணர்ச்சிமிகுதியில் அவரது கண்களில் ஆனந்த கண்ணீர் எட்டிப்பார்த்தது. 2 புள்ளிகள் மட்டுமே பின்தங்கிய வெர்ஸ்டப்பென் (ரெட்புல் அணி) 421 புள்ளிகளுடன் 2-வது இடமும், பியாஸ்ட்ரி (மெக்லரன்) 410 புள்ளிகளுடன் 3-வது இடமும் பெற்றனர். 7 முறை சாம்பியனான இங்கிலாந்தின் லீவிஸ் ஹாமில்டன் 156 புள்ளிகளுடன் 6-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். அணிகளுக்கான சாம்பியன்ஷிப்பில் நோரிஸ், பியாஸ்ட்ரியை உள்ளடக்கிய மெக்லரன் அணி வாகை சூடியது.

26 வயதான நோரிஸ் கூறுகையில், ‘இதை என்னால் நம்ப முடியவில்லை. நீண்ட நாள் கனவு நனவாகியுள்ளது. அழக்கூடாது என்று நினைத்தேன். ஆனால் உணர்வை கட்டுப்படுத்த முடியவில்லை’ என்றார். பார்முலா1 கார்பந்தய பட்டத்தை ருசித்த 11-வது இங்கிலாந்து வீரர் நோரிஸ் ஆவார்.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.