`உங்க தம்பி கமல்சார்கூட இருக்காரே பரவால்லயா'ன்னு ஆனந்த் கேட்டார் – தவெகவில் சேர்ந்த நடிகர் ஜீவா ரவி

சட்டப் பேரவைத் தேர்தல் நெருங்க நெருங்க, அரசியல் களத்தில் புதுப்புது என்ட்ரிகள், இடப் பெயர்வுகள் என நாள்தோறும் சம்பவங்களுக்குப் பஞ்சமில்லை.

அதிமுகவிலிருந்த கே ஏ செங்கோட்டையன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த அடுத்த சில தினங்களில் திமுகவில் இருந்த செங்கோட்டையனின் அண்ணன் மகன் அதிமுகவில் இணைந்தார்.

சினிமா ஏரியாவில் இருந்தும் பலர் தங்கள் அபிமான கட்சிகளில் சேர்வது தொடங்கியிருக்கிறது. அந்த வகையில் நடிகர் ஜீவா ரவி தமிழக வெற்றிக் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார்.

கட்சியில் சேர்ந்துதுமே கே ஏ செங்கோட்டையனையும் சந்தித்திருக்கும் ரவியிடம் பேசினோம்.

”பெரிய பின்னணி கொண்ட குடும்பம் எங்களோடது. சில வருடங்களாகவே ஏதாவது சர்வீஸ் பண்ணலாம்கிற‌ ஒரு எண்ணம் மனசுக்குள் ஓடிக்கிட்டே இருந்தது. இருக்கிற ரெண்டு பெரிய கட்சியிலயும் சேர விருப்பமில்லை.

vijay
vijay

விஜய் சார்கூட ‘கத்தி’ உள்ளிட்ட சில படங்கள்ல நடிச்சிருக்கேன். என்னுடைய மகன் கல்யாணத்தை அவர்தான் தலமைமை தாங்கி நடத்தி வச்சார். அவர் அரசியலுக்கு வரப்போறார்ங்கிற பேச்சு வந்ததிலிருந்தே அவருடைய அரசியலை கவனிச்சிட்டே வந்தேன்.

அவருடைய அரசியல் என்ட்ரியை தமிழகமே வரவேற்கிறதுக்கான சாட்சிதான் கூடுகிற கூட்டம், சமீபகாலத்துல எந்தவொரு அரசியல் தலைவருக்கும் இப்படியொரு கூட்டம் கூடி நான் பார்த்ததே இல்லை. அவரைப் பார்க்க இளைஞர்கள், பெண்கள்னு எல்லாரும் திரண்டு வர்றாங்க. இந்தக் கூட்டமெல்லாம் சும்மா வேடிக்கை பார்க்க மட்டுமே வருதுன்னு யாரும் குறைச்சு எடைபோடக்கூடாது. தமிழக அரசியலையும் சினிமாவையம் பிரிக்கமுடியாது. கலைஞர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதான்னு இங்க சாதிச்சவங்க பட்டியலை எடுத்துப்பார்த்தாலே சினிமாவுக்கும் தமிழக அரசியலுக்கும் இடைப்பட்ட தொடர்பை தெரிஞ்சுக்கலாம். அதே வழியிலதான் விஜய்சாரும் வர்றார்.

அதனாலேயே அவருடைய கட்சியில சேர்ந்து செயல்படலாம்னு தோணுச்சு.

கொஞ்ச நாள் முன்னாடி வேறொரு வேலையா தவெக பொதுச் செயலாளர் ஆனந்தைச் சந்திச்சேன். அப்பவே அவர் நீங்க நம்ம கட்சியில சேர்ந்து செயல்படலாமேன்னு சொன்னார்.

எனக்கும் சரின்னு படவே இப்ப கட்சியில சேர்ந்தாச்சு. ஆனா விஜய் சாரை இதுவரை சந்திக்கல. சீக்கிரமே சந்திக்க இருக்கேன்” என்றவரிடம்,

செங்கோட்டையைனைச் சந்தித்தது குறித்துக் கேட்டோம்.

”எங்களுடைய சொந்த ஊரும் கோபிசெட்டிபாளையம்தான். செங்கோட்டையன் அண்ணனை பல வருஷமா எங்க குடும்பத்துக்குத் தெரியும். அவரும் விஜய் சார் கூட பயணிக்கத் தொடங்கியிருக்கறதால மரியாதை நிமித்தமா அவரைச் சந்திச்சேன்’ என்றார்.

தவெகவில் இணைந்த செங்கோட்டையன்
செங்கோட்டையன்

‘உங்க தம்பி மகேந்திரன் கமலுடன் இருக்கிறாரே’ என்ற கேள்வியையும் கேட்டோம்.

”தவெக பொதுச் செயலாளருமே எங்கிட்ட இதே கேள்வியைக் கேட்டார்.

‘கமல் சார்கூட தம்பி இருக்கறதால வீட்டுல ஏதாவது பிரச்னை வராதா’ன்னார்.

”எங்க குடும்பத்தைப் பொறுத்தவரை எல்லாருக்கும் சுதந்திரம் இருக்கு. அவரவர் விருப்பு வெறுப்புகளை பரஸ்பரம் மதிக்கிறோம். அதேநேரம் அவை குடும்பத்தின் உள்ளே உறவைக் கெடுக்காதபடியும் பார்த்துக்கிடுறோம்.

எனக்குத் தெரிய மகேந்திரன் கமல் சாருடைய சினிமா தயாரிப்பு நிறுவனத்தைத்தான் கவனிக்கிறார். அரசியல் செயல்பாடுகள்ல இன்வால்வ் ஆக மாட்டார்னு நினைக்கிறேன்.

அதனால வீட்டுல சந்திக்கிறபோது, அவங்கவங்க கொள்கை, அரசியலையெல்லாம் பேசறதில்லை. அதனால என் விருப்பப்படி நான் விஜய் சாரை ஆதரிக்கிறேன். இதனால வீட்டுல அண்ணன் தம்பி இடையே பிரச்னையெல்லாம் வராதுங்க’ என்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.