புதுடெல்லி,
இந்தியாவின் பொது விமானத்துறையான ஏர் இந்தியா நிறுவனம் டாடாவிடம் விற்கப்பட்டது. மேலும் இந்தாண்டு ஜூனில் லண்டன் சென்ற ஏர் இந்தியா விமானம் ஆமதாபாத்தில் விபத்தில் சிக்கியது. இதில் 260 பேர் உயிரிழந்தனர். இதனால் ஏர் இந்தியா மீதான நம்பிக்கை பொதுமக்களிடம் சரிய தொடங்கியது. மறுபக்கம் தனியார் விமான நிறுவனமான இண்டிகோ விமான நிறுவனம் இந்தியாவின் விமான போக்குவரத்தில் அசைக்க முடியாத பெரும்சக்தியாக உருப்பெற்றது.
அந்த நிறுவனத்திடம் 134 விமானங்கள் உள்ளன. இதன் மூலம் உள்நாட்டு சேவைகள் 1,840-ம், சர்வதேச சேவைகள் 460-ம் என அந்த நிறுவனம் இயக்கி வருகிறது. அதன்படி இந்தியாவின் மொத்த உள்நாட்டு விமான சேவையில் இண்டிகோ நிறுவனம் 68 சதவீதத்தை மேற்கொண்டு ஏகபோக விமான நிறுவனமாக வளர்ந்தது.
சிவில் போக்குவரத்து விமான இயக்குனரகம், விமானிகளுக்கான புதிய பணிநேர வரன்முறைகளை அமல்படுத்தியது. இண்டிகோ நிறுவனத்தின் விமானிகளின் பணிச்சுமையை குறைத்து அதிக சலுகைகள் வழங்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டன. இண்டிகோ விமானங்கள் அதிகளவில் ரத்து செய்யப்பட்டது. குறிப்பாக கடந்த ஒரு வாரமாக இண்டிகோ நிறுவனத்தின் விமானங்கள் பெருமளவில் ரத்து செய்யப்பட்டன. இதனால் இந்தியாவின் உள்நாட்டு விமான சேவை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. நாடே இதுவரை கண்டிராத அளவுக்கு விமான போக்குவரத்தில் மிகப்பெரிய பிரச்சினையை சந்தித்தது.
இதுதொடர்பாக உரிய விளக்கம் அளிக்க வலியுறுத்தி சிவில் விமானப் போக்குவரத்து இயக்குனரகம் இண்டிகோ தலைமை செயல் அதிகாரி பீட்டர் எல்பர்சுக்கு சம்மன் அனுப்பியது. அவர் மத்திய சிவில் விமான போக்குவரத்து மந்திரி ராம் மோகன் நாயுடு முன்பு நேற்று நேரில் ஆஜராகி விளக்கம் அளித்திருந்தார்.
இந்நிலையில் 9வது நாளாக இண்டிகோ நிறுவனத்தின் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், அதன் சேவைகளை 10 சதவீதம் வரை குறைக்க சிவில் விமானப் போக்குவரத்து இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. இந்த தகவலை மந்திரி ராம் மோகன் நாயுடு தனது வலைத்தள பதிவு மூலம் தெரிவித்துள்ளார்.
இதன்படி விமானங்களை திறமையாக இயக்கத் தவறியதால், விமான சேவைகளை குறைத்து இன்று (புதன்கிழமை) மாலை 5 மணிக்குள் திருத்தப்பட்ட அட்டவணையை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் இண்டிகோ நிறுவனத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறைக்கப்படும் சேவைகள் பிற நிறுவனங்களுக்கு ஒதுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக நாள் ஒன்றுக்கு இண்டிகோ விமான நிறுவனத்தின் 230 விமானங்கள் சேவைகள்வரை ரத்தாகும் என்று கூறப்படுகிறது.