கேரள உள்ளாட்சி தேர்தல்; காங்கிரஸ் கூட்டணி 387 வார்டுகளில் முன்னிலை

கொச்சி,

கேரள மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தல் 2 கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது. அதன்படி திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா, பத்தனம்திட்டா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி ஆகிய 7 மாவட்டங்களில் கடந்த 9-ந்தேதி முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்தது. இந்தநிலையில் 2-ம் கட்ட உள்ளாட்சி தேர்தல் திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய 7 மாவட்டங்களில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்த 7 மாவட்டங்களில் 3 மாநகராட்சிகளில் 188 வார்டுகளுக்கும், 7 மாவட்ட ஊராட்சிகளில் 182 வார்டுகளுக்கும், 47 நகராட்சிகளில் 1,829 வார்டுகளுக்கும், 77 ஊராட்சி ஒன்றியங்களில் 1,177 வார்டுகளுக்கும், 470 கிராம ஊராட்சிகளில் 9,015 வார்டுகளுக்கும் என மொத்தம் 12 ஆயிரத்து 391 வார்டுகளுக்கு வாக்குப்பதிவு நடந்தது. இந்த தேர்தலில் மொத்தம் 38,994 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் 18,974 பேர் ஆண்கள், 20,020 பேர் பெண்கள் ஆவர்.

இதற்காக 18,274 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது. பதற்றமான 2,055 வாக்குச்சாவடிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. அங்கு வாக்குப்பதிவு வீடியோ பதிவு செய்யப்பட்டது. மொத்தம் 72 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் கண்ணூர் மாவட்டம் சிரைக்கல் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் ஓட்டு போட்டார். கேரளாவில் நடைபெற்ற 2-ம் கட்ட உள்ளாட்சி தேர்தலில் சராசரியாக 75.38 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. மாலை 6.30 மணி நிலவரப்படி, திருச்சூர் மாவட்டத்தில் 71.88 சதவீதம், பாலக்காடு மாவட்டத்தில் 75.60 சதவீதம், மலப்புரம் மாவட்டத்தில் 76.85 சதவீதம், கோழிக்கோடு மாவட்டத்தில் 76.47 சதவீதம், வயநாடு மாவட்டத்தில் 77.34 சதவீதம், கண்ணூர் மாவட்டத்தில் 75.73 சதவீதம், காசர்கோடு மாவட்டத்தில் 74.03 சதவீதம் வாக்குப்பதிவானது. பிற மாவட்டங்களை ஒப்பிடும் போது, வயநாடு மாவட்டத்தில் அதிக வாக்குகள் பதிவாகி இருந்தன.

வாக்குப்பதிவுக்கு பின்னர் வாக்குப்பதிவு எந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு அந்தந்த மாவட்டங்களில் உள்ள வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. இந்நிலையில், கேரள உள்ளாட்சி தேர்தலில் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணியளவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. பதிவான வாக்குகள் எண்ணும் பணி 244 மையங்களில் நடக்கிறது. இதனையொட்டி வாக்குகள் எண்ணும் மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், நண்பகல் வெளியான தகவலின்படி, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி 387 வார்டுகளில் முன்னிலை வகிக்கிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி 283 வார்டுகளிலும், பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 71 வார்டுகளிலும் முன்னிலை வகிக்கின்றன. பிற கட்சிகள் 59 வார்டுகளில் முன்னிலை வகிக்கின்றன.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.