`எடப்பாடி பழனிசாமிக்கு அட்வைஸ்; விஜய் மீது மறைமுக விமர்சனம்' – உதயநிதி ஸ்பீச் ஹைலைட்ஸ்

திமுக இளைஞரணி செயலாளரும், துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தலைமையில், தி.மு.க இளைஞரணி வடக்கு மண்டல நிர்வாகிகள் திருவண்ணாமலை இன்று (டிசம்பர் 14) நடைபெற்றது.

முதல்வர் ஸ்டாலின், மூத்த அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள், அமைச்சர்கள் உள்ளிட்டட பலர் கலந்துகொண்டனர்.

திமுக இளைஞரணி நிர்வாகிகள் கூட்டம்

கூட்டத்தில் பேசிய உதயநிதி, “இது ஏதோ கணக்கு காட்டுவதற்காக கூட்டப்பட்ட கூட்டம் கிடையாது, நம் எதிரிகள் போடுகின்ற தப்பு கணக்குகளை உடைக்கின்ற கொள்கை கூட்டம்.

பொதுவாக இளைஞர்கள் அதிகமாகக் கூடினால் அவர்களைக் கட்டுப்படுத்த முடியாது என்ற பிம்பம் இப்போது வந்திருக்கிறது. ஆனால், இந்தக் கூட்டம் அப்படி அல்ல. கட்டுப்பாடு இல்லாமல் ஒரு கோடி இளைஞர்கள் திரண்டாலும் அதனால் யாருக்கும் எந்தப் பயனும் கிடையாது. அப்படிக் கட்டுப்பாடு இல்லாத கூட்டத்தை வைத்துக்கொண்டு யாராலும் எதையும் சாதிக்கவும் முடியாது.

ஒன்றிய அமைச்சர் அமித் ஷா, அடுத்த டார்கெட் தமிழ்நாடுதான் என்று நமக்கு சவால் விட்டிருக்கிறார். அமித் ஷாவுக்கும் அவரின் அடிமை கூட்டத்திற்கும் ஒன்றை நான் சொல்கிறேன், நீங்கள் எவ்வளவு சீண்டினாலும் எவ்வளவு மிரட்டினாலும் அதை எதிர்கொள்வதற்கு எங்களின் கருப்பு சிவப்பு படை என்றைக்கும் களத்தில் தயாராக இருக்கும்.

தமிழ்நாடு என்றைக்குமே டெல்லிக்கு அவுட் ஆஃப் கண்ட்ரோல்தான். நேராக வந்தால் ஜெயிக்க முடியாது என்று பழைய அடிமைகளையும், புது அடிமைகளையும் துணைக்கு அழைத்துக் கொண்டு நம்மோடு மோதப் பார்க்கிறார்கள் மோடியும், அமித் ஷாவும்.

இப்படிப்பட்ட பா.ஜ.க-வை நம்பித்தான் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் களத்துக்கு வந்திருக்கிறார். நான்கு நாள்களுக்கு முன்னால் சென்னையில் அ.தி.மு.க பொதுக்குழு கூட்டத்தில், 2026-ல் எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் ஆக்குவோம் என்று அடிமைகள் தீர்மானம் போட்டிருக்கிறார்கள்.

காரில் பேட்டரி டவுன் ஆனால் நான்கு பேர் தள்ளிவிட்டு ஸ்டார்ட் பண்ணலாம். ஆனால் காரில் இஞ்சினே இல்லை என்றால் எவ்வளவு தள்ளினாலும் அது ஸ்டார்ட் ஆகாது.

அந்த இஞ்சின் இல்லாத கார்தான் இன்றைக்கு இருக்கின்ற அ.தி.மு.க. பா.ஜ.க என்கிற லாரி அந்த இன்ஜின் இல்லாத காரை எப்படியாவது கட்டி இழுத்துக் கொண்டுப் போகப் பார்க்கிறது.

ஸ்டாலின் - உதயநிதி
ஸ்டாலின் – உதயநிதி

நீதித்துறையை காப்பாற்ற வேண்டும், தமிழ்நாட்டை காப்பாற்ற வேண்டும் என்று சொல்லும் எடப்பாடி பழனிசாமி, முதலில் அ.தி.மு.க-வை பா.ஜ.க-விடமிருந்து காப்பாற்ற வேண்டும்.

இன்று அ.தி.மு.க-விலிருந்து ஒவ்வொருவராகக் கிளம்பி கொண்டிருக்கிறார்கள். ஆனால், அவரோ யார் வேண்டுமானாலும் வாருங்கள், யார் வேண்டுமானாலும் போங்கள் நான் மட்டும்தான் நிரந்தர பொதுச்செயலாளர் என்கிறார். இதுதான் எடப்பாடி பழனிசாமிக்குத் தேவை. நமக்கும் இதுதான் தேவை.

எடப்பாடி பழனிசாமி அவர்களே உங்களிடம் ஒரு விஷயத்தை சொல்கிறேன், அடிமையாக இருந்து சுகமாக வாழ்வதைவிட, சுயமரியாதையோடு சுதந்திரமாக வாழ்வதுதான் முக்கியம்.

யார் வேண்டுமானாலும் இடையில் வரட்டும் போகட்டும் அதைப் பற்றி நமக்கு கவலை வேண்டாம்.

வானவில் பார்ப்பதற்கு ரொம்ப அழகாக இருக்கும். அதைப் பார்க்க மக்கள் கூடுவார்கள். ஆனால், அது நிரந்தரம் கிடையாது. உதயசூரியன் மட்டும் தான் நிரந்தரம். உதயசூரியன் மட்டும்தான் மக்களுக்கான வெளிச்சத்தை தரும்.

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்

இரண்டாம் உலகப்போர் சமயத்தில் ஜெர்மனியின் தாக்குதலைத் தாக்குப்பிடிக்க பிடிக்க முடியாமல், எதிரில் இருந்த எல்லா நாடுகளும் ஜெர்மனியிடம் சரணடைந்தன.

ஆனால், அப்படிப்பட்ட ஜெர்மனியையே எதிர்த்து நின்றது ஒரே ஒரு ரஷ்ய நகரம். அந்த ஒரு நகரம்தான் ஜெர்மனியைத் தோற்கடித்தது. அந்த நகரத்தின் பெயர் ஸ்டாலின்கிராட்.

அதே மாதிரி நம் நாட்டில் பாசிஸ்டிகளுக்கு எதிரான போரில் இந்தியாவின் ஸ்டாலின்கிராடாக நம் தமிழ்நாடு களத்தில் நின்று ஜெயித்துக் காட்ட வேண்டும்” என்று கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.