குமரி மாவட்டத்தின் ரெயில்வே கோரிக்கைகள் – மத்திய மந்திரியிடம் விஜய் வசந்த் எம்.பி. மனு

புதுடெல்லி,

புதிய ரெயில்கள், ரெயில் நிறுத்தங்கள், ரெயில் நீட்டிப்பு, உட்கட்டமைப்பு வசதிகள், தொலைநோக்கு திட்டங்கள் என பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், மத்திய ரெயில்வே துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவை சந்தித்து பேசினார்.

கன்னியாகுமரியை தலைமையிடமாக கொண்டு புதிய ரெயில்வே கோட்டம் அமைக்க வேண்டும் என்ற நீண்ட நாள் மக்கள் கோரிக்கையை வலியுறுத்திய விஜய் வசந்த், கீழ்கண்ட முக்கிய கோரிக்கைகளையும் முன் வைத்தார்.

நாகர்கோவில் வழியாக திருவனந்தபுரம் – வேளாங்கண்ணி வாரந்திர ரெயில், கன்னியாகுமரி – ஐதராபாத் தினசரி விரைவு ரெயில் ஆகிய புதிய ரெயில்களின் தேவையை முன் வைத்தார். புதியதாக அறிமுகபடுத்த திட்டமிட்டுள்ள சென்னை அம்ரித் பாரத் ரெயிலை கன்னியாகுமரி வரை நீட்டிக்க வேண்டும், புனலூர் – மதுரை ரெயிலை காரைக்கால் வரை நீட்டிக்க வேண்டும், மங்களூர் – திருவனந்தபுரம் ரெயிலை கன்னியாகுமரி வரை நீட்டித்தல், ஹவ்ரா – திருச்சி ரெயிலை கன்னியாகுமரி வரை நீட்டித்தல், திருநெல்வேலி வந்தேபாரத் ரெயிலை நாகர்கோவில் வரை நீட்டித்தல், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி செல்லும் பயணிகளுக்காக திருவனந்தபுரம் – நாகர்கோவில் ரெயில்களை நீட்டிக்க வேண்டும் எனவும், தாம்பரம் – நாகர்கோவில், ராமேஸ்வரம் – கன்னியாகுமரி ரெயில்களை தினசரி சேவையாக மாற்ற வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்.

காந்திதாம் விரைவு ரெயில் மற்றும் ஜாம்நகர் ரெயில்கள் குழித்துறை ரெயில் நிலையத்திலும், புனலூர்-மதுரை ரெயில் பள்ளியாடி ரெயில் நிலையத்திலும், திருச்சி-திருவனந்தபுரம் இன்டர்சிட்டி (intercity) ரெயில் இரணியல் ரெயில் நிலையத்திலும் நின்று செல்ல வேண்டும் என கோரினார்.

ரெயில் இரட்டிப்பு பணிகள் கன்னியாகுமரி மாவட்டத்தில் மிக மந்தமான நிலையில் நடைபெற்று வருவதை சுட்டிக்காட்டி அதனை துரிதபடுத்த ஆவன செய்ய வேண்டும் என கேட்டுகொண்டார். கன்னியாகுமரியில் மின்சார லோகோ ஷெட் (electric loco shed) , நாகர்கோவில் டவுன் மற்றும் கன்னியாகுமரி ரெயில் நிலையத்திற்கு செல்ல இரண்டாவது நுழைவு வாயில், நாகர்கோவில் டவுன், இரணியல் மற்றும் குழித்துறை ரெயில் நிலையங்களில் கூடுதல் நடைமேடைகள், மோசமான நிலையில் காணப்படும் குழித்துறை ரெயில் நிலையம் செல்லும் சாலையை செப்பனிடுதல், மழை காலங்களில் தண்டவாளத்தில் மண்சரிவு ஏற்படுவதை தடுக்க தகுந்த நடவடிக்கைகள், பயணிகள் வசதி கருதி ரெயில் நிலையங்களின் மேம்பாடு ஆகியவற்றை சுட்டி காட்டி கோரிக்கை வைத்தார்.

ராமேஸ்வரம்-தூத்துக்குடி-திருச்செந்தூர்-கன்னியாகுமரி கடற்கரை ரெயில் பாதை ஏற்கனவே அறிவிக்கபட்டிருந்தது. அதனை நடைமுறைபடுத்த வேண்டும் என கேட்டுகொண்டார். அது போன்று அறிவிக்கப்பட்டுள்ள அங்கமாலி-எருமேலி-விழிஞ்சம் ரெயில் பாதையின் ஒரு பகுதியை கன்னியாகுமரி மாவட்டம் நெட்டா-குலசேகரம்-பூதப்பாண்டி வழியாக ஆரல்வாய்மொழி சென்றடையும் விதமாக நீட்டிப்பதற்கு ஆய்வு நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்தார். அது போன்று காலி சரக்கு ரெயில்கள் செல்ல கன்னியாகுமரி- நாகர்கோவில் இடையே மூன்றாவது ரெயில் பாதையை அமைக்க வேண்டும் எனவும் கேட்டு கொண்டார்.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.