ஓடிடி நிறுவனங்களுக்கு குட் நியூஸ்! சென்சார் கிடையாது – மத்திய அரசு முக்கிய அறிவிப்பு

Central Government: இந்தியாவில் நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் போன்ற ஓடிடி (OTT) தளங்களின் வளர்ச்சி அசுர வேகத்தில் உள்ளது. அதே சமயம், இந்தத் தளங்களில் வெளியாகும் ஆபாசம் மற்றும் வன்முறை காட்சிகள் குறித்த புகார்களும் அதிகரித்த வண்ணம் உள்ளன. இந்நிலையில், ஓடிடி கன்டென்டுகளை மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் (CBFC) முறைப்படுத்துமா என்ற கேள்விக்கு மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெளிவான விளக்கத்தை அளித்துள்ளது.

Add Zee News as a Preferred Source

சென்சார் போர்டு வரம்பிற்குள் வராத ஓடிடி

மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு எழுத்துப்பூர்வமாகப் பதிலளித்த மத்திய இணையமைச்சர் டாக்டர் எல். முருகன், ஓடிடி உள்ளடக்கங்கள் தொடர்ந்து மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்தின் (CBFC) அதிகார வரம்பிற்கு வெளியேதான் இருக்கும் என்பதை உறுதிப்படுத்தினார். சினிமா திரையரங்குகளில் வெளியாகும் படங்கள் மட்டுமே 1952-ஆம் ஆண்டு சினிமாடோகிராப் சட்டத்தின் கீழ் தணிக்கை செய்யப்பட வேண்டும். ஆனால், ஓடிடி தளங்கள் 2021-ஆம் ஆண்டு தகவல் தொழில்நுட்ப விதிகளின் மூன்றாம் பிரிவின் கீழ் முறைப்படுத்தப்படுகின்றன என்று அவர் விளக்கினார்.

மூன்று அடுக்கு பாதுகாப்பு முறை

ஓடிடி தளங்களில் வெளியாகும் உள்ளடக்கங்கள் தணிக்கை செய்யப்படாவிட்டாலும், அவை தன்னிச்சையாகச் செயல்பட முடியாது. இதற்காக மத்திய அரசு மூன்று அடுக்கு கண்காணிப்பு முறையை அமல்படுத்தியுள்ளது:

முதல் அடுக்கு: அந்தந்த ஓடிடி நிறுவனங்களே தங்களின் உள்ளடக்கங்களைச் சுய முறைப்படுத்தல் (Self-regulation) செய்துகொள்ள வேண்டும்.

இரண்டாம் அடுக்கு: வெளியீட்டாளர்களின் சுய-ஒழுங்குமுறை அமைப்புகளால் கண்காணிக்கப்படும் சுய ஒழுங்குமுறை

மூன்றாம் அடுக்கு: மத்திய அரசின் மேற்பார்வை அமைப்பு

பொதுமக்களிடமிருந்து ஏதேனும் புகார்கள் வந்தால், அவை உடனடியாக சம்பந்தப்பட்ட ஓடிடி தளங்களுக்கு அனுப்பப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படுவது உறுதி செய்யப்படுகிறது.

வயது வாரியான வகைப்பாடு

திரையரங்கு படங்களைப் போல ‘U’ அல்லது ‘A’ சான்றிதழ் வழங்கப்படாவிட்டாலும், ஓடிடி தளங்கள் கட்டாயமாகத் தங்கள் உள்ளடக்கங்களை வயது வாரியாகப் பிரிக்க வேண்டும். குறிப்பாக 13+, 16+, மற்றும் 18+ என வகைப்படுத்தி, சிறார்களுக்குப் பாதுகாப்பான சூழலை உருவாக்க Parental Lock வசதிகளையும் வழங்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது.

43 தளங்களுக்குத் தடை

இந்திய இணையதளங்கள் பாதுகாப்பானதாகவும், ஆபாசமற்றதாகவும் இருப்பதை உறுதி செய்வதில் அரசு உறுதியாக உள்ளது. டாக்டர் எல். முருகன் வழங்கிய தகவலின்படி, ஆபாசமான மற்றும் சட்டவிரோதமான உள்ளடக்கங்களை ஒளிபரப்பியதற்காக இதுவரை இந்தியாவில் 43 ஓடிடி தளங்கள் முடக்கப்பட்டுள்ளன. இந்தத் தடை செய்யப்பட்ட தளங்கள் பல ‘ஹனி ட்ராப்’ மற்றும் சட்டவிரோத பணப்பரிமாற்ற புகார்களிலும் சிக்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

படைப்பாளர்களுக்குக் கிடைத்துள்ள சுதந்திரம்

மத்திய அரசின் இந்த முடிவு ஓடிடி படைப்பாளர்களுக்குப் பெரிய நிம்மதியைத் தந்துள்ளது. சினிமா திரையரங்குகளில் உள்ள கடும் தணிக்கை விதிகள் ஓடிடிக்கு வராததால், சமூகத்தின் பல்வேறு யதார்த்தமான சிக்கல்கள், அரசியல் மற்றும் மாறுபட்ட கதைக்களங்களைச் சுதந்திரமாக உருவாக்க முடியும் எனப் படைப்பாளிகள் கருதுகின்றனர். இருப்பினும், “சுதந்திரம் என்பது பொறுப்பற்ற தன்மை அல்ல” என்பதை உணர்த்தும் வகையில், நாட்டின் இறையாண்மை, பொது ஒழுங்கு மற்றும் தார்மீக விழுமியங்களுக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் உள்ளடக்கங்கள் இருந்தால், ஐடி சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் முருகன் எச்சரித்துள்ளார்.

About the Author


Karthikeyan Sekar

Karthikeyan Sekar

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.