மதுரை மடப்புரம் காளியம்மன் : நோய் நீக்கும் தலம்… பொய்சாட்சி சொல்பவர்களை தண்டிக்கும் சத்தியக்கல்!

கலியுகத்தில் பக்தர்களுக்கு அற்புதம் நிகழ்த்தி அருள் செய்யும் அம்மன் தலங்கள் பல உள்ளன. அவற்றில் ஒன்று மதுரை மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில். தேவாரத் திருத்தலமாம் திருப்பூவநாதர் கோயிலுக்கு வடகிழக்கில் அமைந்துள்ளது இந்தத் தலம். மதுரை மண்டலத்தில் மடப்புரம் காளி என்ற வார்த்தை கேட்டாலே துஷ்ட சக்திகள் மிரண்டு ஓடும் என்பார்கள். அந்த அளவுக்கு ஆங்கார காளியாகவும் கருணை பொழிவதில் காக்கும் அன்னையாகவும் திகழ்கிறாள் மடப்புரம் காளி.

மதுரை மடப்புரம் காளியம்மன் கோயில்

இங்கு அம்மனின் தோற்றம் மிகவும் கம்பீரமானது. ஆக்ரோஷமாக அம்மன் திரிசூலம் ஏந்திய தேவியாகக் காட்சிகொடுக்கிறாள். அக்னி ஜூவாலைகளையே தன் கிரீடமாகக் கொண்ட அன்னையைப் பார்த்தாலே நம் மனபயம் அகன்றுவிடும். துர்சக்திகள் விலகிவிடும். அன்னையின் திருமேனி அகலமான பீடத்தில் அமைந்திருக்கிறது. அன்னைக்கு அருகில் நிற்கும் குதிரைகள் போர்க்களத்தில் பாய்ந்து சென்று எதிரிகளைப் பந்தாடத் தயாராக இருப்பதுபோல் முன்னங்கால்களைத் தூக்கி நிற்கின்றன.

இங்கே மூலஸ்தானத்தில் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார் ஐயனார். ஐயனைக் காணும்போதே மேனி சிலிர்க்கிறது. இவரே இக்கோயிலின் காவல் தெய்வம். பத்ரகாளியை பக்தியோடு வணங்குவதுபோன்று ஐயனாரையும் அன்போடு வேண்டிக்கொண்டால் அனைத்து நன்மைகளும் கைகூடும் என்பது நம்பிக்கை.

ஒரு பிரளய காலத்தில் மதுரை நகரம் வெள்ளத்தால் சூழப்பட்டு முற்றிலும் மூழ்கிப்போனது. அப்போது அன்னை மீனாட்சி அம்மன் மதுரைக்கு எல்லை காட்டவேண்டும் என்று இறைவனிடம் கேட்க, சிவபெருமான் தன் கழுத்தில் உள்ள ஆதிசேஷனை எடுத்துவீச மதுரையின் எல்லையாக அவர் நின்றார்.

மதுரை மடப்புரம் காளியம்மன் கோயில்

மேற்கே திருவேடகமும் தெற்கே திருப்பரங்குன்றமும் வடக்கே திருமாலிருஞ்சோலையும் வகுத்த ஈசன் கிழக்கில் மடப்புரத்தில் ஆதிசேஷனின் படத்தையும் வாலையும் ஒன்று சேர்த்து எல்லை காட்டினார்.

ஈசன் தன் கைகளால் இறுக்கிக் கட்ட ஆதிசேஷனின் விஷம் வெளியேறியது. அப்போது அங்கிருந்த அம்பிகை அதை உண்ணும்படியாயிற்று. எனவே அவள் அந்த விஷத்தை உண்டு ஆங்கார ரூபிணியாக, காளியாக எழுந்தருளினார். கலியுகம் முடியும்மட்டும் அங்கே அம்பிகை காளியாகக் கோயில்கொண்டு தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு அருள் செய்யட்டும் என்று ஈசன் வரமளிக்க அங்கேயே அன்னை கோயில்கொண்டு அருள்பாலித்துவருகிறாள்.

அங்கு அன்னைக்குக் காவலாக ஐயனாரும் எழுந்தருளினார். தன் வாகனமாகிய குதிரையை அம்மனுக்கு நிழலாக நிற்கும்படிப் பணித்து தானும் அங்கே அடைக்கலம் காத்த ஐயனாராக எழுந்தருளினார்.

இங்கு வந்து வேண்டிக்கொண்ட பக்தர்களுக்கு அன்னை காளி நிகழ்த்தும் அற்புதங்கள் ஏராளம். நோய்நொடிகள், எதிரிகளின் தொல்லைகள், வறுமை, கடன் தொல்லை என்று பல்வேறு துன்பங்களோடு தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு அன்னைக் காளி அருள்பாலித்து வருகிறார். இங்கு ஒருமுறை வந்து வேண்டிக்கொண்டாலே தீராத வினைகள் எல்லாம் தீரும் என்பது நம்பிக்கை.

காளியம்மனுக்கு வடக்கே இருக்கிறது சத்தியக்கல். இரு நபர்களுக்கிடையே பிரச்னை என்றால், இந்தக் கல்லில் இருவரும் சூடத்தை ஏற்றி, `காளி சத்தியமா நாங்க தப்பு செய்யவில்லை’ என்று சத்தியம் செய்யவேண்டும். இருவரும் கழுத்தில் அரளிமாலை போட்டுக்கொண்டு, காளியம்மனுக்கு வலப்புறமாக நிற்கும் பூதத்தைக் கட்டிப் பிடித்து, தப்பு செய்யவில்லை என ஒப்புக் கொடுக்க வேண்டும். அதுக்கு முன்னதாக, தப்பு செய்தவர்கள், ஒப்புக்கொண்டால் பிழைத்தார்கள். இல்லை என்றால் பொய் சத்தியம் செய்தவரைக் காளி உண்டு இல்லை என்று செய்துவிடுவாளாம். `தண்டிப்பதில் இவள் கறாரானவள் என்பதால் இவளிடம் யாரும் பொய் சொல்வதில்லை’ என்கிறார்கள் ஊரார். தப்பு செய்தவர், இங்கு வந்த உடனே மனம் திருந்தி பாதிக்கப்பட்டவரிடம் மன்னிப்பு கேட்டு நிவாரணம் செய்த கதைகளும் அநேகம் உண்டாம்.

வாய்ப்பிருக்கும் பக்தர்கள் ஒருமுறை மடப்புரம் சென்று அன்னை பக்தரகாளியை வழிபாடு செய்து வாழ்வில் சகல நலன்களையும் பெறலாம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.