2003-ம் ஆண்டு, வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆயுதப்படை காவலரான கதிரவன், கைதி ஒருவரை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்கிறார். அப்போது அந்தக் கைதி தப்பித்து ஓட, அவரைப் பிடிக்கும் முயற்சியில் சுட்டு விடுகிறார். அதில் அக்கைதி இறந்துபோக, கதிரவன் மீது விசாரணை பாய்கிறது.
இந்த நெருக்கடிக்கிடையில், கொலை வழக்கில் விசாரணை கைதியாக இருக்கும் அப்துல் ராவூஃப் என்ற இளைஞரை, வேலூர் சிறையிலிருந்து மற்றொரு மாவட்ட நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லும் வேலை வருகிறது.
இந்தப் பயணத்தில், அப்துல் ராவூஃப் யார், அவர் குற்றவாளியானது எப்படி, இறுதியில் இருவருக்கும் என்ன நேர்கிறது என்பதே அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரியின் ‘சிறை’ படத்தின் கதை.

தன் திறன் மீதான தன்னம்பிக்கை, சட்டத்தின் முன் நேர்மை, கோபத்தை அடக்கி வைக்கும் தருணம், பிறருக்காக மனமிறங்கும் தருணம் என முழுக்க முழுக்க முதிர்ச்சியான அணுகுமுறையைக் கோரும் கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்திருக்கிறார் விக்ரம் பிரபு.
படம் முழுவதும் பரிதாபத்தைக் கோரும் கதாபாத்திரத்தைக் கச்சிதமாகக் கையாண்டிருக்கிறார் அறிமுக நடிகர் எல்.கே. அக்ஷய் குமார்.
பெரும்பாலும் கண்ணீரும் கம்பலையுமாகவே வந்தாலும், காதல், பிடிவாதம், மனவுறுதி, ஆக்ரோஷம் என உருமாறும் அக்கதாபாத்திரத்தின் ஆழத்தை உணர்ந்து, தேவையான நடிப்பை வழங்கியிருக்கிறார் அனிஷ்மா அனில்குமார். ஆங்காங்கே அவர் பேச்சில் எட்டிப் பார்க்கும் மலையாள வாடையைத் தவிர்த்திருக்கலாம்.
அக்ஷய் குமாரின் அம்மாவாக ரெம்யா சுரேஷ், அனிஷ்மா அனில்குமாரின் அக்காவாக இஸ்மத் பானு, இஸ்மத் பானுவின் கணவராக நடித்தவர், காவலராக ஹரிஷங்கர் நாராயணன் எனத் துணைக் கதாபாத்திரங்கள் அனைவரும் கதையின் உணர்வுகளுக்கும், உணர்ச்சிகளுக்கும் துணை நின்றிருக்கிறார்கள். ஒரேயொரு காட்சியில் வரும் மூணாறு ரமேஷ் தன் வசனத்தால் கிளாப்ஸ் அள்ளுகிறார்.
குறிப்பாக, தொடக்கத்தில் பேருந்துக்குள் நிகழும் சண்டையைப் படமாக்கிய விதத்தில் நேர்த்தி!
விறுவிறுப்பையும், பதைபதைப்பையும் நழுவவிடாமல், இழுத்துக் கட்டியிருக்கிறார் படத்தொகுப்பாளர் பிலோமின் ராஜ். கதாபாத்திரங்களின் உணர்வுகளை மென்மையாகப் பேசுகின்றன ஜஸ்டின் பிரபாகரனின் பாடல்கள்.
பரபரப்பிற்கான வேகத்தையும், உணர்வுகளுக்கான இறுக்கத்தையும் கொண்டுவந்து, படத்திற்குப் பெரும் பலமாக நிற்கிறது அவரின் பின்னணி இசை. 2000களின் தொடக்கக் கால பேருந்துகள், அக்கால நீதிமன்றம், ஆயுதப்படை பயிற்சித்தளம் எனக் கதையுலகின் எதார்த்தத்திற்குக் கைகொடுத்திருக்கிறது வர்ஷினி சங்கரின் தயாரிப்பு வடிவமைப்பு.
முதல் ஒரு சில காட்சிகளிலேயே பரபரப்பைப் பற்ற வைத்து, திரைக்கதையின் விறுவிறு தன்மைக்கு தயார்ப்படுத்தி, பிரதான கதாபாத்திரத்தின் அகத்தையும் அறிமுகம் செய்கிறது படம். அதைத் தொடர்ந்து, யூகிக்கும்படியான பாதையிலேயே நகர்கிறது திரைக்கதை.
எதிர்பார்த்த திருப்பங்களும், காட்சிகளும் அடுத்தடுத்து வந்தாலும், அக்காட்சிகளில் விரியும் கதாபாத்திரங்களும், அதன் வழியாகப் பின்னப்படும் பின்கதைகளும் சுவாரஸ்யத்தைக் கூட்டுகின்றன.
உணர்வுபூர்வமான கதைக்குள் காவல்துறையின் கட்டமைப்பு, அதன் படிநிலை, நீதித்துறையின் செயல்பாடுகள் போன்றவற்றையும் தெளிவாகவும், காட்சிகளோடு இயைந்த படியும் பேசுகிறது சுரேஷ் ராஜகுமாரி, தமிழ் ஆகியோரின் திரைக்கதை.
இரண்டாம் பாதியில் இன்னும் ஆழமாகி, வெவ்வேறு மனமாற்றங்களை அடையும் கதாபாத்திரங்கள், திரைக்கதைக்கு உயிரூட்டியிருக்கின்றன.
முதல் காட்சியிலிருக்கும் நிலைப்பாட்டிலிருந்து இறுதிக்காட்சியில் வேறு நிலைப்பாட்டிற்கு மாறும் காவலர் கதிரவன், தன் நோக்கத்திற்காக மூர்க்கமான மனநிலையிலிருக்கும் அனிஷ்மா, அதே நோக்கத்திற்காகச் சாந்தமான மனநிலையிலிருக்கும் அக்ஷய் எனக் கதாபாத்திரங்கள் கையாளப்பட்ட விதம் பெரும் பலம்.
அதேநேரம், சில காட்சிகள் பிரதான கதாபாத்திரங்கள் எடுக்கும் உணர்ச்சிகரமான முடிவுகளிலும், பேசும் வசனங்களிலும் நம்பகத்தன்மை இல்லை. அதனால், அதுவரை எதார்த்த ரோட்டில் ஓடிய திரைக்கதை, அவ்விடங்களில் நாடகத்தன்மைக்கு வழிமாறுகின்றன.
இந்தியா முழுவதும் துன்பப்படும் விசாரணைக் கைதிகளின் நிலை, சமூகத்தில் அடக்குமுறைக்கு உள்ளாகும் சிறுபான்மையினர், காவல்துறையாலும் நீதித்துறையாலும் வஞ்சிக்கப்படும் சிறுபான்மை ஏழைகள் எனப் பல அரசியல் அடுக்குகளை அழுத்தமாகப் பேசுகிறது படம்.
ஈழத்தமிழர்களுக்காகத் தன்னை மாய்த்துக்கொண்ட தமிழகத் தமிழர் அப்துல் ராவூஃப் பற்றிய மேற்கொள், சிறுபான்மையினரின் அன்றாட வழிப்பாட்டு முறைகளைக் கூட அந்நியமாகப் பார்க்கும் சமூகத்தின் மனநிலையை விளக்கும் காட்சிகள் போன்றவை துருத்திக்கொண்டு நின்றாலும், அவை கதைக்கருவின் ஆன்மாவை அழுத்தமாகப் பேசுகின்றன.
பிரதான கதாபாத்திரங்களின் மனவோட்டத்தின் வழியாக, பார்வையாளர்களையும் பதற வைக்கிறது இறுதிக்காட்சி. காவலர்கள், தங்களுக்குக் கிடைத்த அதிகாரத்தை வைத்து, எளியவர்களுக்கு உதவச் சொல்லுகிறது இறுதிக்காட்சி.
ஆயுதப்படைகளின் அடிப்படையை வைத்துப் பார்க்கும்போது, அது எளிதில் சாத்தியமில்லாத ஒன்றாகத் தோன்றினாலும், காவல்துறைக்குள் ஏற்பட வேண்டிய சீர்திருத்தமாகவும், எளிய மக்களுக்கான நம்பிக்கை கீற்றாகவும் கவனிக்க வைக்கிறது.
பரபரப்பு, எமோஷன் என இரண்டையும் கச்சிதமாகக் கொண்டுவந்து, திரையனுபவமாகவும், சமூக கருத்தாகவும் கவர்ந்து, நம் மனதைச் சிறைபிடிக்கிறது இந்த ‘சிறை’.