'என்னை அசிங்கப்படுத்துகின்றனர்'; 'இது என் கடைசி யுத்தம்' – ராமதாஸின் '25 இடங்கள்' டார்கெட்

பாமகவில் தந்தை – மகன் இடையே பிரச்னை நடந்து வருவது அனைவரும் அறிந்தது தான்.

வரும் டிசம்பர் 29-ம் தேதி, சேலத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடக்க உள்ளது.

இந்த நிலையில், ராமதாஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

போர்…

அதில், ‘இப்போது பாமகவில் நடந்து வருவது குடும்ப பிரச்னையோ, ஈகோவோ, கோபமோ அல்ல… இது நான் பெற்றெடுத்த இயக்கத்தின் ஆன்மாவைக் காப்பதற்கான போர்.

எனக்கு வயதாகிவிட்டது, புத்தி பேதலித்துவிட்டது, சுயநினைவு இல்லாமல் பேசுகிறார் என்று கடந்த சில நாள்களாக அன்புமணி கும்பல் என்னைப் பற்றி என்னென்னவோ கூறி வருகின்றன… அசிங்கப்படுத்துகின்றன.

அன்புமணி, ராமதாஸ்
அன்புமணி, ராமதாஸ்

அன்புமணியை நம்பியது மிகப்பெரிய தவறு

ஆனால், இந்தக் கட்சியைக் காயப்படுத்தாதீர்கள். இந்தக் கட்சி எனக்கு வந்த சீதனமோ, பரம்பரை சொத்தோ கிடையாது. இது நானாக கட்டிய மக்கள் கோட்டை.

இப்போது இந்தக் கட்சி பலவீனமாக நிற்கும்போது பெற்ற வயிறு பற்றி எரிகிறது.

நான் என் மகன் அன்புமணியை நம்பியது மிகப்பெரிய தவறு.

தலைமைப் பண்பு தானாகவும், தியாகத்திலும் வரவேண்டும். அன்புமணிக்கு எம்.பி, மத்திய அமைச்சர் பதவி, ராஜ்யசபா பதவி என பதவிகள் வழங்கினோம். அவருக்கு பொறுப்புகள் தான் வந்தன… பொறுப்புணர்ச்சி அல்ல.

உதாரணம்

அதற்கு உதாரணம், அன்புமணியின் நாடாளுமன்ற வருகை வெறும் 30% மட்டுமே. விவாதங்களின் போது ஒரு எம்.பி சராசரியாக 79 விவாதங்களில் கலந்து கொண்டிருக்கிறார். ஆனால், அன்புமணி கலந்துகொண்டது என்னவோ ஏழு.

இப்படி எம்.பி பதவியை வீணடித்தது போல, கட்சியில் அவர் செய்ததும் நிறைய இருக்கிறது.

ஒருகாலத்தில் 20 எம்.எல்.ஏ.க்கள் இருந்த பாமகவிற்கு இன்று அங்கீகாரம் இல்லை. உழைக்க வேண்டிய நேரத்தில் அங்கீகாரம் தேடிக்கொண்டிருந்தது தான் இதற்கு காரணம்.

அன்புமணி, ராமதாஸ்
அன்புமணி, ராமதாஸ்

கட்சி சின்னத்தை மீட்க‌ வேண்டும்!

இந்த வயதில் எனக்கு பதவி தேவையில்லை. நான் கட்டிய வீட்டை உங்களுக்காக பாதுகாக்க முன்வந்துள்ளேன்.

இன்று தலைமைப் பதவியே நீதிமன்றத்தில் நிற்கிறது. அஸ்திவாரத்திலேயே சந்தேகம் இருந்தால், அந்தக் கட்டடம் எப்படி நிற்கும்?

வருகிற தேர்தலில் 25 இடங்களில் வெற்றி பெற்று கட்சியின் சின்னத்தை மீட்க‌ வேண்டும்.

பெற்ற அப்பனுக்கே துரோகம் செய்பவர் இந்த இயக்கத்தைப் பின்னர் காப்பாற்றுவாரா என்பதை அன்புமணி பக்கம் இருக்கும் என் தொண்டர்கள் யோசியுங்கள்.

வயதாகிவிட்டது… இது என் கடைசி யுத்தமாக கூட இருக்கலாம். ஆனால், என்‌ கடைசி மூச்சிருக்கும் வரை அறத்துடனும், அன்புடனும்‌ போராடுவேன்.

இந்த இயக்கத்தைக் காப்பாற்றும் கடைசி வாய்ப்பு இந்தப் பொதுக்கூட்டம்” என்று பேசியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.