விஜய்யின் கடைசி திரைப்படமான ‘ஜனநாயகன்’ வருகிற ஜனவரி 9-ம் தேதி திரைக்கு வருகிறது.
இயக்குநர் எச். வினோத் இயக்கியிருக்கும் இப்படத்தில் பாபி தியோல், பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பிரியாமணி, பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த 27-ம் தேதி பிரமாண்டமான முறையில் மலேசியாவில் நடைபெற்றது.

அந்த இசை வெளியீட்டு விழாவின் காணொளிகள்தான் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாக இருக்கின்றன. இப்படத்தின் தயாரிப்பாளர் கே.வி. நாராயணன் NDTV ஊடகத்திற்குப் பேட்டியளித்திருக்கிறார்.
அந்தப் பேட்டியில், “‘ஜன நாயகன்’ இசை வெளியீட்டு விழா சிறப்புமிக்க நிகழ்வாக நடந்து முடிந்திருக்கிறது. மக்கள் கூட்டம் அதிகமாகக் கூடிய நிகழ்வு இதுதான் எனவும் எங்களுக்கு தெரியப்படுத்தியிருக்கிறார்கள்.
துரதிர்ஷ்டவசமாக, இது விஜய் சாரின் கடைசி படம் என்று அவர் கூறிவிட்டார். திரையில் அவரை நாம் அனைவரும் உண்மையிலேயே மிஸ் செய்யப்போகிறோம்.
ஏனெனில் இத்தனை ஆண்டுகளாக விஜய் சார் ஒவ்வொரு வீட்டிலும் ஓர் அங்கமாக இருந்திருக்கிறார்.
அவரது வசனங்கள், நடனங்கள், பாடல்கள், காட்சிகள் என அனைத்தும் நமக்கு கொண்டாட்டமாக இருந்தது. இனி ஒரு வெற்றிடம் ஏற்படும்.

அதை நிரப்ப முடியாது என்றே நினைக்கிறேன். விஜய் சாருடன் பணியாற்றிய அனுபவம் உண்மையிலேயே அழகானது.
விஜய் சார் ஒரு கடின உழைப்பாளி. வேலையில் அவரது அர்ப்பணிப்பு, ஒழுக்கம், தொழில்முறை மற்றும் நெறிமுறைகள் அசாதாரணமானவை என்று நினைக்கிறேன்.
‘ஜன நாயகன்’ படம் விஜய் சாரின் திரைத்துறை லெகசிக்கு ஒரு டிரிப்யூட்போல வடிவமைத்திருக்கிறோம். விஜய் சார் படங்களில் ரசிகர்கள் எதிர்பார்க்கும் அனைத்தும் இதில் உள்ளன.” எனக் கூறியிருக்கிறார்.