Dwayne Bravo : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் பிளேயரான டுவைன் பிராவோ, தன்னுடைய முன்னாள் கேப்டன் குறித்து பல முக்கியமான தகவல்களையும், நெகிழ்ச்சியான அனுபவங்களையும் பகிர்ந்துள்ளார். ஒரு போட்டியில் டைவ் அடித்தபோது, அருகில் வந்த தோனி, தன்னை டைவ் அடிக்க வேண்டாம் என அறிவுறுத்தியதாகவும், நான்கு ரன்கள் முக்கியமில்லை, உன்னுடைய நான்கு ஓவர்களே எனக்கு முக்கியம் என தெரிவித்ததாகவும் கூறியுள்ளார். மேலும், தோனியை தனது “இன்னொரு தாயின் சகோதரன்” என்றும் பிராவோ குறிப்பிட்டுள்ளார். 2018-ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் நடந்த இந்த நெகிழ்ச்சியான சம்பவத்தையும் அவர் தற்போது பகிர்ந்துள்ளார்.
Add Zee News as a Preferred Source
தோனி கொடுத்த ‘வார்னிங்’
2018-ல் சிஎஸ்கே அணி இரண்டு ஆண்டு தடைக்குப் பிறகு மீண்டும் களமிறங்கியது. அப்போது பிராவோவுக்கு 34 வயது. ஒரு போட்டியின் போது, லாங்ஆன் திசையில் நின்றிருந்த பிராவோ, பந்தைத் தடுக்கத் தரையில் விழுந்து டைவ் அடித்துள்ளார். இதை கவனித்த தோனி, அந்த ஓவர் முடிந்ததும் பிராவோவை அழைத்து, “இனிமேல் பீல்டிங்கில் நீ ஒருபோதும் டைவ் அடிக்காதே. நீ டைவ் அடித்து 4 ரன்களைக் காப்பாற்றுவதை விட, உன்னுடைய 4 ஓவர்கள் அணிக்கு மிக முக்கியம். உனக்கு காயம் ஏற்படுவதை நான் விரும்பவில்லை,” என்று கறாராகவும் அதே சமயம் அக்கறையுடனும் கூறியுள்ளார். அத்துடன் காயங்களைத் தவிர்க்க பிராவோவை இன்னர் சர்க்கிள்குள்ளேயே பீல்டிங் செய்யவும் வைத்திருக்கிறார் தோனி.
பிராவோ பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்
தொடர்ந்து பேசிய பிராவோ, “அந்த மேட்சியில் முதல் ஓவர் வீசும்போது பீல்டிங் செட் செய்வது குறித்து தோனி கேட்டார். நான் எனது திட்டத்தைக் கூறியதும், தோனி அதில் தலையிடாமல் அப்படியே விட்டுவிட்டார். உண்மையில், வீரர்களின் திறமை மீது தோனி வைத்திருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கைக்கு இது ஒரு உதாரணம்.
சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் மற்றும் தோனி ஆகிய இருவரும் வீரர்களை ஒருபோதும் எடை போடுவதில்லை. வெற்றி பெற்றாலும், தோல்வி அடைந்தாலும் அவர்களின் அணுகுமுறை ஒரே மாதிரியாகவே இருக்கும். வீரர்களின் மனநிலையைப் புரிந்து கொண்டு, அவர்கள் மீது தேவையற்ற அழுத்தத்தை ஏற்றாமல் சுதந்திரமாகச் செயல்பட அனுமதிப்பதே தோனியின் வெற்றி ரகசியம்” என பிராவோ புகழாரம் சூட்டியுள்ளார்.
சிஎஸ்கே-வின் தனித்துவம்
மற்ற அணிகளை விட சிஎஸ்கே தனித்துத் தெரிவதற்கு அந்த அணியில் உள்ள ‘ஜட்ஜ்மென்ட் இல்லாத’ சூழலே காரணம் என்றும் பிராவோ கூறியுள்ளார். வீரர்களின் பலத்தை அறிந்து, அவர்களை அப்படியே ஏற்றுக் கொள்ளும் தோனியின் குணம் தான் பல கோப்பைகளை வெல்லக் காரணமாக அமைந்துள்ளது என்றும் பிராவோ நெகிழ்ச்சியோடு தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் டுவைன் பிராவோ
ஐபிஎல் வரலாற்றில் ஒரு தலைசிறந்த ஆல்-ரவுண்டராகவும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் செல்லப்பிள்ளையாகவும் திகழ்ந்தவர் டுவைன் பிராவோ. 2008-ம் ஆண்டு ஐபிஎல் தொடங்கப்பட்டபோது மும்பை இந்தியன்ஸ் அணியில் தனது பயணத்தைத் தொடங்கிய இவர், 2011-ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்தார். சிறந்த ஆல்ரவுண்டராகவும் உருவெடுத்தார். 2013-ம் ஆண்டு சீசனில் 32 விக்கெட்டுகள் வீழ்த்தி, ஒரு சீசனில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலர் என்ற சாதனையை படைத்தார். 161 போட்டிகளில் விளையாடி 183 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள இவர், நீண்ட காலம் ஐபிஎல் தொடரின் அதிக விக்கெட் வீழ்த்திய பவுலராக முதலிடத்தில் இருந்தார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2011, 2018, 2021 என மூன்று ஐபிஎல் கோப்பைகள் வெல்லும்போது பிராவோ கொடுத்த பங்களிப்பு அளப்பரியது. 2022-ல் ஓய்வு பெற்ற பிறகு, சிஎஸ்கே அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராகப் பொறுப்பேற்றார். இப்போது, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆலோசகராக உள்ளார்.
About the Author

Karthikeyan Sekar
Karthikeyan Sekar
…Read More