மும்பை மாநகராட்சி தேர்தல்: மராத்தியர்களை (மட்டும்) தக்கவைத்துக்கொண்ட தாக்கரே சகோதரர்கள்!

மும்பை மாநகராட்சியை எப்படியும் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக உத்தவ் தாக்கரே 20 ஆண்டுகள் கழித்து ராஜ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனாவுடன் கூட்டணி அமைத்தார். இக்கூட்டணியால் நடந்து முடிந்த மாநகராட்சி தேர்தலில் மும்பை மாநகராட்சியை தாக்கரே சகோதரர்களால் தக்கவைத்துக்கொள்ள முடியவில்லை.

சிவசேனா(உத்தவ்) 65 இடங்களில் வெற்றி பெற்று இருக்கிறது. கடந்த தேர்தலில் 84 இடங்களில் வெற்றி பெற்றது. ராஜ் தாக்கரே தலைமையிலான நவநிர்மான் சேனாவும் எதிர்பார்த்த அளவு தேர்தலில் வெற்றி பெறவில்லை.

இத்தேர்தலில் மராத்தியர்களை குறிவைத்து தாக்கரே சகோதரர்கள் தேர்தலை சந்தித்தனர். தாக்கரே சகோதரர்கள் வேட்பாளர்களை நிறுத்தி இருக்கும் இடங்களில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா வேட்பாளர்களை நிறுத்தி இருந்தது. ஆனால் இத்தேர்தல் முடிவுகளில் மராத்தியர்கள் தாக்கரே சகோதரர்களுக்கு ஆதரவாகவே வாக்களித்துள்ளனர்.

தாக்கரே சகோதரர்களால் மும்பையை தக்கவைத்துக்கொள்ள முடியாவிட்டாலும் மராத்தியர்களை தக்கவைத்துக்கொண்டனர்.

மராத்தியர்கள் அதிகம் வசிக்கும் தாதர், மாகிம், ஒர்லி, தீந்தோஷி, பாண்டூப், விக்ரோலி, பாந்த்ரா கிழக்கு போன்ற பகுதியில் தாக்கரே சகோதரர்களின் கட்சிகள் வெற்றி பெற்றுள்ளன. ஆனால் மேற்கு மும்பையில் உள்ள மராத்தியர்கள் தாக்கரே சகோதரர்களை கைவிட்டுள்ளனர். மாநகராட்சி தேர்தல் வாழ்வா சாவா போராட்டம் என்று உத்தவ் தாக்கரே குறிப்பிட்டு இருந்தார். சிவசேனா(உத்தவ்) மும்பையில் 163 இடங்களிலும், நவநிர்மான் சேனா 53 இடங்களிலும் போட்டியிட்டன.

இத்தேர்தலில் முஸ்லிம் வேட்பாளர்கள் இரண்டு பேர் உத்தவ் தாக்கரே கட்சியில் இருந்து வெற்றி பெற்று இருக்கின்றனர். மும்பையில் சிவசேனாவின் செல்வாக்கு என்ன என்பதை மக்களவை மற்றும் சட்டமன்றத் தேர்தல்கள் ஏற்கனவே வெளிப்படுத்தின. ஆனால், மாநகராட்சி தேர்தல் மிகவும் கடுமையாக இருந்தது. உண்மையான சேனா எது என்பதை தீர்மானிக்கும் வகையில் அமைந்திருந்தது. தாக்கரேக்கள் இந்த முறை இணைந்து போட்டியிட்டார்கள். எனவே, தாக்கரே முத்திரைக்கு இது ஒரு உண்மையான சோதனையாக அமைந்தது. இச்சோதனையில் தாக்கரே சகோதரர்களால் மராத்தியர்களை மட்டுமே தக்கவைக்க முடிந்தது.

தோல்வியை தழுவிய வாரிசுகள்

சிவசேனா(ஷிண்டே) 90 இடங்களிலேயே போட்டியிட்டது. ஷிண்டேவின் சேனா தலைவர்களின் வாரிசுகளுக்கு அதிக அளவில் சீட் கொடுத்து இருந்தது. தற்போது மற்றும் முன்னாள் எம்எல்ஏக்கள் / எம்பிக்கள் குடும்ப உறுப்பினர்கள் 8 பேருக்கு டிக்கெட் கொடுக்கப்பட்டு இருந்தது. முன்னாள் எம்பி ராகுல் ஷெவாலேவின் மைத்துனி வைஷாலி நயன் ஷேவாலே வார்டு 183வது வார்டிலும், முன்னாள் எம்எல்ஏ சதா சர்வான்கரின் மகன் சமாதான் மற்றும் மகள் பிரியா முறையே 194 மற்றும் 191 (ஒர்லி, மாகிம்)வது வார்டிலும், குர்லா எம்எல்ஏ மங்கேஷ் குடால்கரின் மகன் ஜெய் குடால்கர் (கே) 169வது வார்டிலும் போட்டியிட்டனர்.

சேனா எம்.பி ரவீந்திர வாய்கரின் மகள் தீப்தி வாய்கர்-போட்னிஸ் வார்டு 73ல் (ஜோகேஸ்வரி) போட்டியிட்டார். ஆனால் அவர்கள் அனைவரும் தோற்றனர். கடந்த சட்டமன்ற தேர்தலில் ரவீந்திர வாய்கரின் மனைவி போட்டியிட்டார். அவரும் தோல்வியை தழுவினார்.

இதேபோல், பாண்டூப் எம்எல்ஏ அசோக் பாட்டீலின் மகன் ரூபேஷ் பாட்டீல் 113வது வார்டில் போட்டியிட்டார். முன்னாள் கவுன்சிலர் தீபக் ஹண்டேவின் மனைவி அஷ்வினி ஹண்டேவுக்கு 128 (காட்கோபர்)வது வார்டில் டிக்கெட் வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் இரண்டு பேரும் தோல்வி அடைந்தனர். உத்தவ் தாக்கரேயிடமிருந்து பிரிந்து சென்ற முன்னாள் கவுன்சிலர்கள் பலரும் தோல்வியை தழுவினர்.

மும்பையில் முஸ்லிம் வேட்பாளர்கள் 31 பேர் வெற்றி பெற்றுள்ளனர். இதில் அதிகமானோர் காங்கிரஸ் கட்சியில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ளனர். முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் கோவண்டி பகுதியில் சமாஜ்வாடி கட்சியிடம் இருந்த அனைத்து வார்டுகளையும் ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி பிடித்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.