India vs New Zealand 2nd T20 : இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் முதல் போட்டி முடிந்துள்ளது. நாக்பூரில் நடைபெற்ற முதல் போட்டியில் 48 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி, தற்போது ராய்ப்பூரில் நடைபெறவுள்ள 2-வது போட்டிக்கு தயாராகிவிட்டது. இப்போட்டியிலும் வெற்றிக்கொடி நாட்ட இந்திய அணி முனைப்புடன் உள்ளது. ஏனென்றால், 2026 டி20 உலகக்கோப்பை தொடருக்கு இன்னும் 20 நாட்களே உள்ளது. எனவே, இப்போட்டியில் எந்த அணிக்கு வெற்றி வாய்ப்பு என்பதை இங்கே பார்க்கலாம்.
Add Zee News as a Preferred Source
இந்தியா – நியூசிலாந்து 2வது டி20 எப்போது?
ராய்ப்பூரில் உள்ள ஷஹீத் வீர் நாராயண் சிங் சர்வதேச மைதானத்தில் ஜனவரி 23, வெள்ளிக்கிழமை 2வது டி20 நடக்கிறது. இரவு 7 மணிக்கு நடக்கும் இப்போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் மற்றும் ஜியோ ஹாட்ஸ்டார் (Jio Hotstar)-ல் நேரலையாக பார்த்து ரசிக்கலாம்.
பிட்ச் ரிப்போர்ட்
ராய்ப்பூர் மைதானம் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டுக்குமே சமமான வாய்ப்புகளை வழங்கக்கூடியது. மைதானத்தின் பவுண்டரி எல்லைகள் சற்றுப் பெரியது என்பதால், சிக்ஸர் அடிப்பது சவாலாக இருக்கலாம். இது சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக அமைய வாய்ப்புள்ளது. எனினும், பனிப்பொழிவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பந்துவீசவே விரும்புவார்.
இரு அணிகளும் இதுவரை
டி20 கிரிக்கெட்டில் இரு அணிகளும் இதுவரை 26 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. 15 போட்டிகளில் இந்திய அணியும், நியூசிலாந்து அணி 10 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.
உத்தேச லெவன்:
இந்தியா: அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் (WK), இஷான் கிஷன்/ஸ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ் (C), ஹர்திக் பாண்டியா, ரிங்கு சிங், சிவம் துபே, ரவி பிஷ்னோய், ஜஸ்பிரித் பும்ரா, வருண் சக்கரவர்த்தி, அர்ஷ்தீப் சிங்.
நியூசிலாந்து: டிம் ராபின்சன், டெவோன் கான்வே (WK), ரச்சின் ரவீந்திரா, கிளென் பிலிப்ஸ், மார்க் சாப்மேன், டேரில் மிட்செல், மிட்செல் சான்ட்னர் (C), கிறிஸ்டியன் கிளார்க், கைல் ஜேமிசன், இஷ் சோதி, ஜேக்கப் டஃபி.
வெல்லப்போவது யார்?
தற்போதைய ஃபார்ம் மற்றும் சொந்த மண்ணின் சாதகத்தைக் கருத்தில் கொண்டால், இந்தியாவுக்கே வெற்றி வாய்ப்பு 70% உள்ளது. அபிஷேக் சர்மா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோரின் பேட்டிங் அதிரடியும், பும்ராவின் துல்லியமான பந்துவீச்சும் நியூசிலாந்திற்குப் பெரும் சவாலாக இருக்கும். இருப்பினும், நியூசிலாந்து அணியில் ரச்சின் ரவீந்திரா மற்றும் கிளென் பிலிப்ஸ் போன்ற மேட்ச் வின்னர்கள் இருப்பதால், அவர்கள் பதிலடி கொடுக்கக் கடுமையாகப் போராடுவார்கள்.
எதிர்பார்க்கப்படும் ஸ்கோர்:
முதலில் பேட்டிங் செய்யும் அணி 180 – 200 ரன்கள் எடுத்தால் அது சவாலான இலக்காக இருக்கும்.
முதல் போட்டி ரவுண்டப்:
நாக்பூரில் நடந்த முதல் போட்டியில் இந்தியா 238 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்தது. இளம் வீரர் அபிஷேக் சர்மா 35 பந்துகளில் 84 ரன்கள் குவித்து நியூசிலாந்து பந்துவீச்சை சிதறடித்தார். இறுதியில் ரிங்கு சிங் (44*) அதிரடி காட்ட, இந்தியா வலுவான நிலையை எட்டியது. நியூசிலாந்து தரப்பில் கிளென் பிலிப்ஸ் (78) போராடிய போதிலும், வருண் சக்கரவர்த்தி மற்றும் சிவம் துபே தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தியாவின் வெற்றியை உறுதி செய்தனர்.
About the Author

Karthikeyan Sekar
Karthikeyan Sekar
…Read More