பெங்களூரு,
ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்தவர் மரியா சபாடீ ஹொலியூ(வயது 28). கடந்த ஆண்டு(2025) மார்ச் மாதம் இவர் மைசூருவுக்கு வந்தார். மைசூருவில் யோகா பயிற்சி பள்ளியில் சேர்ந்து யோகா கற்று வருகிறார். இதற்காக அவர் மைசூரு டவுன் லட்சுமிபுரம் பகுதியில் தனியாக வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து தங்கி உள்ளார்.
இவருடன் மைசூருவில் தனது பெற்றோருடன் வசித்து வரும் ராகுல் தத்தா என்ற வாலிபரும் யோகா கற்று வந்தார். இந்த நிலையில் மரியாவுடன், ராகுல் நெருங்கி பழகி வந்தார். இருவரும் நட்பாக பழகி வந்தனர். ஒரு கட்டத்தில் மரியாவிடம், தனது காதலை ராகுல் வெளிப்படுத்தினார். ஆனால் அவரது காதலை மரியா ஏற்கவில்லை. இதனால் ராகுல் விரக்தியில் இருந்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த மாதம் (டிசம்பர்) மரியாவை சந்தித்த ராகுல் மீண்டும் தனது காதலை வெளிப்படுத்தி இருக்கிறார். அப்போதும் அவரது காதலை ஏற்க மரியா மறுத்துவிட்டார். மேலும் தனக்கு ஸ்பெயின் நாட்டில் காதலன் இருப்பதாக அவர் கூறியிருக்கிறார். இதனால் ராகுல் கோபத்தில் இருந்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 17-ந் தேதி மைசூரு டவுன் கிருஷ்ணராஜா புலே வார்டு சாலையில் மரியா ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து சென்ற ராகுல், திடீரென மரியாவின் ஸ்கூட்டர் மீது மோதினார்.
இதில் ஸ்கூட்டரில் இருந்து தூக்கி வீசப்பட்ட மரியா படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். அவரை அப்பகுதியினர் மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே ராகுல் தலைமறைவானார்.
இந்த சம்பவம் குறித்து லட்சுமிபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராகுலை வலைவீசி தேடி வந்தனர். மரியாவை கொலை செய்ய முயன்றதாக ராகுல் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் நேற்று முன்தினம் ராகுலை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.