இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் முதல் மூன்று போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது. இந்த தொடர் தொடங்குவதற்கு முன்பு இந்திய அணியின் நட்சத்திர வீரர் திலக் வர்மா காயம் காரணமாக முதல் மூன்று போட்டிகளில் இருந்து விலகி இருந்தார். விஜய் ஹசாரே டிராபி தொடரில் ஹைதராபாத் அணிக்காக விளையாடிக் கொண்டிருக்கும்போது திலக் வர்மாவிற்கு திடீரென வயிற்றுப் பகுதியில் வலி ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனையில் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் மறுவாழ்வு பயிற்சியில் திலக் வர்மா தற்போது ஈடுபட்டு வருகிறார்.
Add Zee News as a Preferred Source

நியூசிலாந்து தொடரில் விலகல்
நியூசிலாந்து அணிக்கு எதிரான கடைசி இரண்டு போட்டிகளில் திலக் வர்மா விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், காயம் முழுவதும் சரியாகவில்லை என்பதால் நியூசிலாந்து தொடரிலிருந்து தற்போது திலக் வர்மா விலகியுள்ளார். அவருக்கு பதிலாக ஏற்கனவே அணியில் இடம் பெற்றுள்ள ஷ்ரேயாஸ் ஐயர் தொடர்வார் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. இது தொடர்பாக பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், “திலக் வர்மா தனது பயிற்சிகளை மீண்டும் தொடங்கியுள்ளார். அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும், முழுமையான மேட்ச் ஃபிட்னஸை எட்டுவதற்கு அவருக்குக் கூடுதல் கால அவகாசம் தேவைப்படுகிறது. எனவே, நியூசிலாந்துக்கு எதிரான தொடரிலிருந்து அவர் விடுவிக்கப்படுகிறார்,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக கோப்பையில் விளையாடுவாரா?
இந்திய டி20 உலக கோப்பை அணியில் திலக் வர்மா இடம்பெற்றுள்ளார். இருப்பினும் நியூசிலாந்து தொடரில் அவர் விளையாடாததால் நேரடியாக உலகக் கோப்பை அணியில் விளையாட முடியுமா என்ற கேள்வியும் எழுந்து வருகிறது. பிப்ரவரி 3ஆம் தேதிக்குள் முழு உடல் தகுதியை அடைந்து, உலகக்கோப்பைக்காண பயிற்சி ஆட்டங்களில் பங்கேற்பார் என்று கூறப்படுகிறது. இருப்பினும் காயத்திலிருந்து மீண்டும் வரும் ஒருவரை நேரடியாக உலக கோப்பை அணியில் விளையாட வைப்பது சரியாக இருக்குமா? என்றும் கிரிக்கெட் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மாற்று வீரர் யார்?
ஒருவேளை உலகக் கோப்பை அணியிலும் திலக் வர்மா விலகினால் அவருக்கு பதிலாக யாரை விளையாட வைப்பது என்ற குழப்பம் தற்போது எழுந்துள்ளது. திலக் வர்மா இல்லாத நிலையில் அவரது இடத்தில் விளையாடி வருகிறார் இஷான் கிஷன். நீண்ட நாட்களுக்கு பிறகு இந்திய அணியில் இடம் பிடித்துள்ள அவர் இரண்டாவது மற்றும் மூன்றாவது டி20 போட்டிகளில் அதிரடி காட்டி வருகிறார். இந்நிலையில் திலக் வர்மா, விலகினால் இஷான் கிஷன் உலக கோப்பை அணியில் விளையாட அதிக வாய்ப்புள்ளது. மேலும் சஞ்சு சாம்சன் ரன்கள் அடிக்க சிரமப்படுவதால், அவருக்கு பதிலாகவும் இஷான் கிஷன் ஓப்பனிங் வீரராக களம் இறங்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. அப்படி சஞ்சு சாம்சன் நீக்கப்பட்டால் ஸ்ரேயாஸ் ஐயருக்கு வாய்ப்பு கிடைக்குமா என்ற கேள்விகளும் எழுந்து வருகிறது. திலக் வர்மா காயத்திலிருந்து முழுமையாக மீண்டு வந்தால் தான் இந்த அனைத்து கேள்விகளுக்கும் விடை கிடைக்கும்.
About the Author
RK Spark