IPL 2026 team owners : ஐபிஎல் தொடரை கேள்விப்படாதவர்கள் இந்தியாவில் யாரும் இருக்க முடியாது. கிரிக்கெட் பார்க்காதவர்கள் கூட ஐபிஎல் தொடரைப் பற்றி அறிந்து வைத்திருக்கிறார்கள். அந்தளவுக்கு இந்தியாவிலும் உலகளவிலும் டி20 பார்மேட்டில் கோலோச்சிக் கொண்டிருக்கும் ஐபிஎல் தொடரில் மொத்தம் 10 அணிகள் இருக்கின்றன.
Add Zee News as a Preferred Source
இந்த பத்து அணிகளைப் போலவே, சில அணிகளின் உரிமையாளர்களும் மிகப் பிரபலம். அம்பானி என்றால் மும்பை இந்தியன்ஸ், ஷாரூக்கான் என்றால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பஞ்சாப் கிங்ஸ் என்றால் ப்ரீத்தி ஜிந்தா என எல்லோருக்கும் தெரிந்து விடும். ஆனால் மற்ற அணிகளின் உரிமையாளர்களை பலரும் அவ்வளவாக அறிந்திருப்பதில்லை. எனவே, இங்கு 10 ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்களை யார் என்பதை பார்க்கலாம்.
மும்பை இந்தியன்ஸ் – ஐபிஎல் வரலாற்றில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்று கோலோச்சிக் கொண்டிருக்கும் மும்பை இந்தியன்ஸ் அணியின் உரிமையாளரை நீங்கள் அறிந்திருப்பீர்கள். முகேஷ் அம்பானி, நீதா அம்பானிக்கு சொந்தமானது தான் இந்த அணி.
சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணியை விட அதிக ரசிகர்களைக் கொண்ட அணி சென்னை சூப்பர் கிங்ஸ். தோனி ஒரு பிளேயராக இந்த அணியில் இருந்தாலும் அவரே பிராண்ட் அம்பாசிடராகவும் இருக்கிறார். ஆனால், அவரை வைத்து சிஎஸ்கே-வை அடையாளப்படுத்தும் அளவுக்கு அந்த அணியின் உரிமையாளர் யார்? என பலருக்கும் தெரிவதில்லை. இந்த அணியின் உரிமையாளர் முன்னாள் பிசிசிஐ தலைவர், இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் என்.சீனிவாசன்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – பாலிவுட் பாட்ஷா ஷாருக்கானின் ‘ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட்’ நிறுவனம், ஜூஹி சாவ்லா மற்றும் ஜே மேத்தா ஆகியோருடன் இணைந்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணியை நிர்வகிக்கிறது. இந்த அணி மூன்று முறை ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) – 2025-ல் தனது முதல் கோப்பையை வென்று சாதனை படைத்த இந்த அணி, தற்போது தியாஜியோ குழுமத்தின் (United Spirits Limited) கீழ் உள்ளது. இருப்பினும், இந்த சீசன் முடிவதற்குள் அணியை விற்க உரிமையாளர்கள் திட்டமிட்டுள்ளதால், சீரம் இன்ஸ்டிடியூட் சிஇஓ ஆதார் பூனவல்லா போன்ற பெரும் தொழிலதிபர்கள் இந்த அணியை வாங்க வாய்ப்புள்ளது.
குஜராத் டைட்டன்ஸ் – இந்த அணியிலும் ஒரு பெரிய மாற்றம் நிகழ்ந்துள்ளது. சிவிசி கேபிடல் நிறுவனத்திடமிருந்து பெரும்பான்மையான பங்குகளை ‘டொரண்ட் குழுமம்’ (Torrent Group) கைப்பற்றியுள்ளது. இந்த புதிய நிர்வாகத்தின் கீழ் குஜராத் அணி தனது அடுத்தகட்ட பாய்ச்சலுக்குத் தயாராகி வருகிறது.
டெல்லி கேபிடல்ஸ் அணி – ஜிஎம்ஆர் (GMR) மற்றும் ஜேஎஸ்டபிள்யூ (JSW) ஆகிய இரு பெரும் குழுமங்களின் 50:50 கூட்டணியில் இயங்குகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த நிறுவனங்கள் மாறி மாறி நிர்வாகப் பொறுப்பை ஏற்றுக்கொள்வது இதன் சிறப்பம்சமாகும்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – தென்னிந்தியாவின் மிகப்பெரிய தொலைக்காட்சி நிறுவனமான சன் குழுமனத்தின் உரிமையாளரான கலாநிதி மாறனின் சன் டிவி நெட்வொர்க் நிறுவனத்திற்குச் சொந்தமானது இந்த அணி. அவரது மகள் காவ்யா மாறன் இந்த அணியின் அடையாளமாகவே மாறிவிட்டார்.
பஞ்சாப் கிங்ஸ் அணி – இந்த அணியை பொறுத்தவரை, மோஹித் பர்மன், நெஸ் வாடியா மற்றும் நடிகை ப்ரீத்தி ஜிந்தா ஆகியோரின் கூட்டுத் தலைமையில் இயங்குகிறது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி – மனோஜ் பதாலே தலைமையிலான ‘எமர்ஜிங் மீடியா’ நிறுவனத்தின் பெரும்பான்மை பங்குகளைக் கொண்டுள்ளது.
இறுதியாக, சஞ்சீவ் கோயங்காவின் ஆர்.பி.எஸ்.ஜி (RPSG) குழுமம் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை வழிநடத்தி வருகிறது.
About the Author

Karthikeyan Sekar
Karthikeyan Sekar
…Read More