இந்தியாவின் 77-வது குடியரசு தினம் 26-ம் தேதி கொண்டாடப்பட்டது. இந்தக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக குடியரசுத் தலைவரால் குடியரசு தின வரவேற்பு நிகழ்ச்சி நடத்தப்படுவது வழக்கம்.
இந்த நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி, ஐரோப்பிய கவுன்சிலின் தலைவர் அன்டோனியோ கோஸ்டா, ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்களுடன், நடிகை சமந்தாவும் விருந்தில் கலந்துகொண்டார்.
அது தொடர்பான படங்களைத் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த அவர், நெகிழ்ச்சியான பதிவு ஒன்றையும் பதிவிட்டிருக்கிறார்.
அதில், “நான் வளர்ந்த காலத்தில் எனக்குத் துணையாகவோ, தட்டிக் கொடுக்கவோ யாரும் இல்லை. இங்கெல்லாம் வந்து சேருவேன் என்று ஒருபோதும் என் உள்ளுணர்வு சொன்னதே இல்லை.
செல்ல வேண்டிய பாதை எதுவென்றும் தெரியவில்லை… இந்தக் கனவுகள் எல்லாம் காண்பதற்கே எட்டாத உயரத்தில் இருந்தன. ஆனால், தளராமல் தொடர்ந்து உழைத்தேன். அந்த உழைப்பிற்கு மதிப்பளித்த இந்தத் தேசத்திற்கு நான் என்றும் நன்றிக்கடன்பட்டிருக்கிறேன்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.