உலகிலேயே அதிக பொய் கூறும் கட்சி பாஜ: அகிலேஷ் கடும் தாக்கு

லக்னோ: உ.பி.யில் 6ம் கட்ட தேர்தல் இன்று நடந்து வருகிறது. கடைசிகட்ட தேர்தல் வரும் 7ம் தேதி நடக்கிறது. இதை முன்னிட்டு தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில், ஜான்பூரில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் அகிலேஷ் யாதவ் பேசியதாவது: உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சி தலைமையிலான கூட்டணி ஆட்சிக்கு வந்தால், அரசு பணிகளுக்கான வயது வரம்பு தளர்த்தப்படுவதுடன், காவல் துறையில் காலியாக இருக்கும் அனைத்து இடங்களும் நிரப்பப்படும். எங்களை குடும்ப கட்சி என்று பாஜ கேலி செய்து வருகிறது. நாங்கள் குடும்ப கட்சியை சேர்ந்தவர்கள்தான் என்பதை ஏற்கிறோம். எந்த தயக்கமும் இல்லை. விவசாயிகளின் வருவாய் இரட்டிப்பாக்கப்படும் என்று வாக்குறுதி அளித்து கடந்த 2017ம் ஆண்டில் உத்தரபிரதேசத்தில் பாஜ ஆட்சியை கைப்பற்றியது. ஆனால், பாஜ அரசின் தவறான கொள்கைகளால் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகவில்லை. உண்மையில், அது பாதியாக குறைந்துவிட்டது. பாஜ, தன்னை உலகின் மிக பெரிய கட்சி என்று அழைக்கிறது. தனது 5 ஆண்டு கால ஆட்சியில் இக்கட்சி மக்களுக்கு ஆற்றிய பணிகளையும், அளித்த வாக்குறுதிகளையும் பகுப்பாய்வு செய்தால், உலகின் மிக பெரிய பொய்யர் கட்சி பாஜ தான் என்பது தெரிய வரும். கொரோனா பரவல் காலங்களில் பாஜவின் தவறான நிர்வாகத்தால் மக்கள் கடும் சிரமங்களை சந்திக்க நேர்ந்தது. பொது ஊரடங்கு காரணமாக பிற மாநிலங்களுக்கு சென்ற புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உ.பி.யில் உள்ள தங்களது சொந்த ஊருக்கு நடந்து செல்ல வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டனர். அவர்களில் பலரும் வழியிலேயே உயிரிழந்தனர். அப்போது, சமாஜ்வாதி கட்சிதான் அந்த மக்களுக்கு உதவி புரிந்தது. புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வீடு திரும்பியபோது, அவர்களை அரசு கண்டு கொள்ளாமல் இருந்தது. கொரோனா பரவல் உச்சம் பெற்ற காலத்தில் போதுமான மருந்துகளையும், படுக்கைகளையும் பாஜ அரசால் வழங்க முடியவில்லை. கொரோனா தொற்று காலத்தில் ஆள்சேர்ப்பு தேர்வுகள் நடைபெறாததால் பல இளைஞர்கள் கலந்து கொள்ள முடியாமல் வயது வரம்பை தாண்டி விட்டனர். எனவே, இந்த இளைஞர்களின் நலன் கருதி அரசு பணிகளில் வயது வரம்பு தளர்த்தப்படும். மேலும், ராணுவ ஆள்சேர்ப்பில் இணையவும் வயது வரம்பில் தளர்வு அளிக்குமாறு மத்திய அரசை வலியுறுத்துவோம். இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.