ஜி-23 கூட்டத்துக்குப் பின் காங்கிரஸ் மூத்த தலைவர் பூபேந்தர் சிங் ஹூடாவுடன் ராகுல் சந்திப்பு

புதுடெல்லி: காங்கிரஸின் கருத்து வேறுபாடு கொண்ட தலைவர்களின் குழுவான ஜி-23 கூட்டத்திற்கு பின்னர் ராகுல் காந்தி, அக்கட்சியின் மூத்த தலைவரும், ஹரியாணா சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவருமான பூபேந்திர் சிங் ஹூடாவை சந்தித்தார்.

ஐந்து மாநிலத் தேர்தல் தோல்விக்குப் பின்னர், அதிருப்தி காங்கிரஸ் தலைவர்களின் கூட்டம் குலாம் நபி ஆசாத் வீட்டில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஹூடாவும் கலந்து கொண்டார். இந்தக் கூட்டம் நடந்து முடிந்த ஒருநாள் கழித்து இன்று வியாழக்கிழமை ராகுல் காந்தி, ஹூடாவை அவரது இல்லத்தில் சந்தித்து உரையாடியுள்ளார். அப்போது ஐந்து மாநிலங்களில் நடந்து முடிந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் மோசமான செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது ராகுல், கட்சியை முன்னோக்கி அழைத்துச் செல்லவும், கட்சியை முழுமையாக சீரமைக்கவும் அழைப்பு விடுத்ததாக கூறப்படுகிறது.

காங்கிரஸ் கட்சியின் கருத்து வேறுபாடு கொண்ட தலைவர்களை பொதுவாக ஜி-23 அல்லது, 23 பேர் குழு என்று அழைப்பர். இதில், கட்சியின் மூத்த தலைவர்களான ஆனந்த் சர்மா, கபில் சிபில், மனிஷ் திவாரி, சசி தரூர், ராஜ் பாபர், சந்தீப் தீக்‌ஷித் உள்ளிட்டோர் உள்ளனர். இவர்கள் கட்சிக்கு புத்துயிர் அளிக்க வேண்டும் எனவும், கட்சியை மறுசீரமைக்க வேண்டும் எனவும் கோரி வருகின்றனர்.

ராகுல் காந்தியுடனான சந்திப்பிற்கு பின்னர், பூபேந்திர சிங் ஹூடா, குலாம் நபி ஆசாத்தை அவரது இல்லத்தில் சென்று சந்தித்தார். அப்போது, காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவைத் துணைத் தலைவர் ஆனந்த் சர்மாவும் உடன் இருந்தார். அவர்கள் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்துவது குறித்தும், குழுவின் கோரிக்கையின்படி கூட்டுத்தலைமை முடிவெடுப்பதை உறுதி செய்தனர் எனவும் தெரிகிறது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டத்திற்கு பின்னர், காங்கிரஸ் நிர்வாகிகள் மத்தியில் கருத்து வேற்றுமை ஏற்பட்ட நிலையில், புதன்கிழமை ஜி 23 கூட்டம் நடந்தது. தேர்தல் தோல்விக்குப் பின்னர் சோனியா காந்தி தலைவர் பதவியை ராஜினாமா செய்ய முன்வந்தார் என்பதும், அவரது முடிவு, ஒருமனதாக நிராகரிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.