நடிகர் விஜயின் ‘பீஸ்ட்’ திரைப்படத்தின் இந்தி பதிப்பு ட்ரெயிலரை, பிரபல பாலிவுட் நடிகரான வருண் தவான் வெளியிட்டுள்ளார்.
‘கோலமாவு கோகிலா’, ‘டாக்டர்’ ஆகிய வெற்றி திரைப்படங்களுக்குப் பிறகு, நடிகர் விஜயை வைத்து நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள திரைப்படம் ‘பீஸ்ட்’. தமிழில் உருவாகியுள்ள இந்தப் படம், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட உள்ளது. அனிருத் இசைமையத்து, சன்பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படம், வரும் 13-ம் தேதி வெளியாக உள்ளது.
ஏற்கனவே இந்தப் படத்தின் இரண்டு பாடல்கள் யூ-ட்யூப்பில் வெளியாகி பல்வேறு சாதனைகளை புரிந்தநிலையில், கடந்த சனிக்கிழமை தமிழில் ‘பீஸ்ட்’ படத்தின் ட்ரெயிலர் வெளியாகி மாபெரும் வரவேற்பு பெற்றது. வணிக வளாகத்தை தீவிரவாதக் கும்பல் ஒன்று தனது கட்டுக்குள் கொண்டுவர, அந்த தீவிரவாதிகளின் திட்டத்தை முறியடித்து, அவர்களிடம் மாட்டிக்கொள்ளும் மக்களை மீட்கும் உளவுத்துறை அதிகாரியாக நடிகர் விஜய் நடித்துள்ளதாக தெரிகிறது.
இந்தப் படம் தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் ‘பீஸ்ட்’ என்ற பெயரிலேயே வெளியாகும்நிலையில், இந்தியில் மட்டும் ‘ரா’ (RAW) என்ற பெயரில் இந்தப் படம் வெளியாக உள்ளது. இந்நிலையில், இந்தப் படத்தின் இந்தி பதிப்பு ட்ரெயிலரை, பிரபல பாலிவுட் நடிகரான வருண் தவான் வெளியிட்டுள்ளார். ட்ரெயிலரை வெளியிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறியுள்ளதாவது, “ ‘பீஸ்ட்’ இந்திய ட்ரெயிலரை வெளியிடுவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நான் எப்பொழுதும் விஜய் சாரின் மிகப் பெரிய ரசிகன்’ என்று தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் இந்தியில் ஹலாமதி ஹபிபோ அரபிக் குத்து பாடலும் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் நாளை மாலை 6 மணிக்கு ‘பீஸ்ட்’ திரைப்படத்தின் தெலுங்கு பதிப்பு வெளியாக உள்ளது. இந்தப் படத்தை, பிரபல தெலுங்கு தயாரிப்பாளரான தில் ராஜூவின் ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் வாங்கி, வெளியிடுகிறது. விஜயின் 66-வது படத்தை தமிழ் மற்றும் தெலுங்கில் தயாரிப்பதும் தில் ராஜூ தான் என்பது குறிப்பிடத்தக்கது.
Happy to be releasing #Beast in Telugu.#BeastTeluguTrailer is releasing on April 5th @6 PM@actorvijay @Nelsondilpkumar @anirudhofficial @hegdepooja @selvaraghavan @manojdft @Nirmalcuts @KiranDrk @anbariv @SVC_Official #BeastModeON #Beast #BeastMovie pic.twitter.com/keJbRG1Ba3
— Sri Venkateswara Creations (@SVC_official) April 3, 2022