முதல் முறையாக கிராமி விருது பெற்ற இந்திய வம்சாவளிப் பெண் – யார் அவர்?

நியூயார்க்கில் வசித்து வரும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண்ணான ஃபால்குனி ஷா, முதல் முறையாக கிராமி விருது வென்று சாதனை படைத்துள்ளார்.

மும்பையில் பிறந்தவரான ஃபால்குனி ஷா, தனது சிறுவயதில் ஜெய்ப்பூர் ஹரானா என்ற பாராம்பரிய இந்துஸ்தானி வகையைச் சேர்ந்த இசையை கற்றுவந்தவர். பின்னர், பிரபல பாடகர் மற்றும் சாரங்கி இசைக்கலைஞரான உஸ்தாத் சுல்தான் கானிடம், பாடல் மற்றும் சாரங்கியை கற்றுத் தேர்ந்தார் ஃபால்குனி ஷா.

இதனைத் தொடர்ந்து, அமெரிக்காவிற்குச் சென்ற அவர், அங்கு போஸ்டன் நகரில் இயங்கிவந்த இந்தோ – அமெரிக்கன் இசைக்குழுவான கரிஷ்மாவில் முக்கிய பாடகியாக ஃபால்குனி ஷா வலம் வந்தார். இதையடுத்து, நியூயார்க் நகரத்திற்கு குடிபெயர்ந்த அவர், சொந்தமாக இசைக்குழு ஒன்றை ஆரம்பித்து, நியூயார்க் நகரம் முழுவதும் பல்வேறு இசைநிகழ்ச்சிகளை நடத்தி வந்தார்.

ஆஸ்கர் விருதுகளை அள்ளிய ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையிலும் பாடியுள்ளார். மேலும் தனது இசைக்குழுவின் மூலம் இசை ஆல்பங்களையும் வெளியிட்டு வந்தநிலையில், கடந்த ஆண்டு ‘ஏ கலர்ஃபுல் வேர்ல்டு’ என்ற குழந்தைகளுக்கான இசை ஆல்பத்தை வெளியிட்டு இருந்தார்.

image

இந்நிலையில், இசைத்துறையில் பணியாற்றும் கலைஞர்களுக்கான மிக உயரிய விருதாக கருதப்படும் 64-வது கிராமி விருது வழங்கும் விழா, இன்று லாஸ் வேகாஸில் நடைபெற்றது. அதில், ஃபால்குனி ஷாவின், ‘ஏ கலர்ஃபுல் வேர்ல்டு’ இசை, சிறந்த குழந்தைகளுக்கான ஆல்பம் பிரிவில் வெற்றிபெற்றது. இதையடுத்து, அவருக்கு கிராமி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஃபால்குனி ஷா கூறுகையில், இந்த விருது கிடைத்தது பற்றி சொல்ல எனக்கு வார்த்தைகளே இல்லை. என்ன ஒரு அற்புதமான தருணம். இந்த ஆல்பத்தில் மிக சிறப்பாக பணியாற்றிய கலைஞர்களால், இந்த விருதை இன்று நான் பெற்றுள்ளேன். அனைவருக்கும் நன்றி’ எனத் தெரிவித்துள்ளார். இதற்கிடையில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் தனது மகனுடன் கிராமி விருதுகளில் கலந்து கொண்ட செல்பியைத் பகிர்ந்திருந்துள்ளது வைரலாகி வருகிறது.

image

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.