பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், மக்கள் பெரியளவில் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்புவரை ஏறத்தாழ 100 நாள்களுக்கும் மேலாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லாமல் இருந்தது. ரஷ்யா உக்ரைன் போர் சூழலில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்தபோது கூட, பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லாமல் இருந்து வந்தது. இந்த நிலையில், தற்போது தொடர்ந்து 13 நாள்களில் 11 முறை பெட்ரோல் – டீசல் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இன்று சென்னையில் பெட்ரோல் ரூ,109.34 -க்கும், டீசல் ரூ,99.42-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இந்த நிலையில், காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில், “மோடி அரசு ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து கடந்த 8 ஆண்டுகளில் எரிபொருள் வரியாக 26,51,919 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இந்தியாவில் சுமார் 26 கோடி குடும்பங்கள் உள்ளன. அதாவது ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் சராசரியாக ஒரு லட்சம் ரூபாய் எரிபொருள் வாரியாக வசூலித்துள்ளது. ஆனால் ஒரு சராசரி குடும்பம் எரிபொருள் வரியாகச் செலுத்திய தொகைக்கு ஈடாக என்ன கிடைத்தது என மக்களாகிய நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்” எனப் பதிவிட்டுள்ளார்.