பொது இடங்களில் குப்பை கொட்டினால் அபராதம்! சென்னை மாநகராட்சி எச்சரிக்கை.!

இயற்கை உரம் தயாரிக்கும் மையங்களில் அதன் முழு திறன் அளவிற்கு பயன்படுத்தி குப்பைக் கொட்டும் வளாகங்களுக்கு செல்லும் குப்பையின் அளவினை குறைக்க வேண்டும் என சென்னை மாநகர மேயர் திருமதி ஆர்.பிரியா தெரிவித்துள்ளார்.

சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் திடக்கழிவு மேலாண்மை பணிகள் குறித்து அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் மேயர் திருமதி ஆர்.பிரியா அவர்கள் தலைமையில் ரிப்பன் கட்டட கூட்டரங்கில் நடைபெற்றது.  

இக்கூட்டத்தில் மேயர் அவர்கள் தெரிவித்ததாவது :

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நாளொன்றுக்கு சராசரியாக 5100 மெட்ரிக் டன் திடக்கழிவுகள் சேகரிக்கப்படுகிறது.  மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் மூலமாக நாள்தோறும் வீடுகளுக்கே சென்று மக்கும், மக்காத குப்பைகளாகவும் தரம் பிரிக்கப்பட்டு பெறப்படுகிறது. மேலும், குப்பைத் தொட்டிகள் மூலமாகவும் சேகரிக்கப்பட்டு அவையும் தரம் பிரிக்கப்பட்டு மறுசுழற்சி செய்யும் வகையிலான குப்பைகள் பதனிடும் மையங்களுக்கு அனுப்பப்படுகிறது.   

மீதமுள்ள கழிவுகள் பெருங்குடி மற்றும் கொடுங்கையூரில் உள்ள குப்பைக் கொட்டும் வளாகங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது.
தூய்மைப் பணியாளர்களின் வேலைப் பளுவை குறைக்கும் வகையிலும், குப்பைகளை தரம் பிரிக்கும் நேரத்தை மிச்சப்படுத்தும் வகையிலும் இல்லங்களிலேயே பெறப்படும் குப்பைகளை மக்கும், மக்காத குப்பைகளாக சரியான முறையில் தரம் பிரித்து வழங்க பொதுமக்களுக்கு விழிப்புணர்வினை ஏற்படுத்திட வேண்டும்.

மேலும், BOV வாகனங்கள் மூலம் சரியான நேரத்தில் சரியான வழித்தடத்தில் சென்று குப்பைகள் சேகரிக்கப்படுகிறதா என்பதையும் கண்காணிக்க வேண்டும்.  
குப்பைக் கொட்டும் வளாகங்களுக்கு கொண்டு செல்லப்படும் குப்பைகளின் அளவை குறைக்கும் வகையில் நுண்ணியிர் உரம் தயாரிக்கும் மையங்கள், உயிரி எரிவாயு மையங்கள், தோட்டக் கழிவுகளை மறுசுழற்சி செய்யும் மையங்கள், உலர்க்கழிவுகளை தனியாக பிரித்தெடுக்கும் வள மற்றும் பொருட்கள் மீட்டெடுக்கும் மையங்கள் மற்றும் பிளாஸ்டிக், உலோகப் பொருட்களை தனியாக பிரித்து மறுசுழற்சியாளர்களுக்கு வழங்குதல் ஆகியவற்றை அவற்றின் முழு திறன் அளவிற்கு பயன்படுத்தி குப்பைகளை மறுசுழற்சிக்கு உட்படுத்த வேண்டும். 

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களிலும் சேகரமாகும்  குப்பைகளில் மக்கும் கழிவுகள் மாநகராட்சியின்  நுண்ணியிர் உரம் தயாரிக்கும் மையங்களுக்கு அனுப்பப்பட்டு, அவற்றிலிருந்து இயற்கை உரம் தயாரிக்கப்பட்டு பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

கடந்த 4ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை 15,534 கிலோ கிராம் இயற்கை உரங்கள்  விற்பனை செய்யப்பட்டு மாநகராட்சிக்கு ரூ.1,37,080/- வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. மேலும், கையிருப்பில் உள்ள இயற்கை உரங்களை விற்பனை செய்ய துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், உலர்க்கழிவுகள் வள மீட்பு மையங்கள் (RRC), பொருட்கள் மீட்பு மையங்களுக்கு (MRF) கொண்டு செல்லப்பட்டு மறுசுழற்சி செய்யப்படுகிறது.  

மேற்குறிப்பிட்ட காலகட்டத்தில் 2,79,832 கிலோ கிராம் உலர்க்கழிவுகள் விற்பனை செய்யப்பட்டு ரூ.17,82,210 வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.

பொது வெளியில் விதிகளை மீறி குப்பைகளை கொட்டிய 478 நபர்களிடமிருந்து  ரூ.2,78,800/- அபராதமும்,  கட்டிடக் கழிவுகளை கொட்டிய 159 நபர்களிடமிருந்து ரூ.3,32,387/- அபராதமும், சுவரொட்டிகள் ஒட்டிய 130 நபர்களிடமிருந்து ரூ.53,100/- அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. 

மேலும், 49 பெருமளவு குப்பைகள் உருவாக்குபவர்களிடமிருந்து (Bulk Waste Generators) ரூ.1,27,000/- அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மாநகராட்சியின் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பை வழங்கி சென்னை மாநகரை தூய்மையாக பராமரிக்க என்பதே மாநகராட்சியின் நோக்கம். 

அபராதம் விதிப்பது என்பது மாநகராட்சியின் நோக்கமல்ல. எனவே, பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பொது இடங்களில் குப்பைகள் மற்றும் கட்டுமானக் கழிவுகளை கொட்டுவதை தவிர்த்து சென்னை மாநகரை தூய்மையாக பராமரிக்க அலுவலர்கள் தகுந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் மதிப்பிற்குரிய துணை மேயர் திரு.மு.மகேஷ் குமார் அவர்கள், அரசு முதன்மைச் செயலாளர்/ஆணையாளர் திரு.ககன்தீப் சிங் பேடி, இ.ஆ.ப., அவர்கள், துணை ஆணையாளர் (சுகாதாரம்) டாக்டர் எஸ்.மனிஷ், இ.ஆ.ப., அவர்கள், தலைமைப் பொறியாளர் (திடக்கழிவு மேலாண்மை) திரு.என்.மகேசன், மாநகர நல அலுவலர் டாக்டர் எம்.ஜெகதீசன் உட்பட பலர் கலந்து கொண்டனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.