கோவை மேட்டுப்பாளையம் – திருநெல்வேலி இடையிலான வாராந்திர சிறப்பு ரயில் இயக்கம்

கோவை: கோவை மேட்டுப்பாளையம் – திருநெல்வேலி இடையிலான வாராந்திர சிறப்பு ரயில் நாளை முதல் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

கோவை மேட்டுப்பாளையத்தில் இருந்து தென் மாவட்டங்களை நேரடியாக இணைக்கும் வகையில் நிரந்தர ரயில்கள் ஏதும் இல்லை. இங்கிருந்து தென்மாவட்டங்களுக்கு செல்ல பேருந்துகளை மட்டுமே மக்கள் நம்பியிருக்க வேண்டிய நிலை உள்ளது. இந்நிலையில், கோவை,மேட்டுப்பாளையம் – திருநெல்வேலி இடையே கோடைகால வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படும் என கடந்த ஏப்ரல் 11-ம் தேதி தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டது.

அதன்படி, மேட்டுப்பாளையம் – திருநெல்வேலி இடையிலான வாராந்திர சிறப்பு ரயில் (எண்:06029), நாளை (ஏப்.22) முதல் வரும் ஜூலை 1-ம் தேதி வரை ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இரவு 7.45 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 7.45 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும். இதேபோல, திருநெல்வேலி-மேட்டுப்பாளையம் இடையிலான வாராந்திர சிறப்பு ரயில் (எண்:06030), திருநெல்வேலியிலிருந்து வரும் ஜூன் 30-ம் தேதி வரை ஒவ்வொரு வியாழக்கிழமையும், இரவு 7 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 7.30 மணிக்கு மேட்டுப்பாளையம் ரயில் நிலையம் வந்தடையும்.

இந்த ரயில்கள் செல்லும் வழியில் கோவை, பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், தென்காசி, பாவூர்சத்திரம், கீழகடையம், அம்பாசமுத்திரம், சேரன்மாதேவி ஆகிய ரயில்நிலையங்களில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மேட்டுப்பாளையத்திலிருந்து நாளை புறப்படும் சிறப்பு ரயிலின் படுக்கை வசதி கொண்ட பெட்டிகளில் பெரும்பான்மை இடங்கள் நிரம்பியுள்ளன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.